தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கு 5 மில்லியன் செலவில் தங்கும் விடுதி

asrama_selangor_04மலேசிய தோட்டங்களில் வாழும் இந்திய மலேசியர்களின் குழந்தைகள் புதியதோர் சூழ்நிலையில் கல்வி கற்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும் என்ற திட்டத்தின் முதல் கட்டமாக சிலாங்கூர் மாநிலத்தில் தோட்டப்புற மாணவர்களுக்கு 5 மில்லியன் செலவில் தங்கும் விடுதி கட்டும் திட்டம் கடந்த சனிக்கிழமை 2-ஆம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

(காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்)

சிலாங்கூர் மாநில பக்கத்தான் அரசாங்கம் தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்டுவதற்கு ஈஜோக்கில் 8 ஏக்கர் நிலத்தையும் ரிம 5 மில்லியனையும் ஒதுக்கி இருக்கிறது. தொடக்கப் பணிகள் தொடங்கி விட்டன. இன்னும் இரு ஆண்டுகளில் அத்தங்கும் விடுதி தயாராகி விடும் என்று அறிவித்து அத்திட்டத்தின் அறிமுக விழாவை மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் தொடக்கி வைத்தார்.

இந்திய இளைஞர்கள் எதிர்காலத்தில் முன்னேற்றம் காண்பதற்கான ஒரே வழி கல்விதான்.  அக்கல்வியை அவர்கள் சிறப்பாக, முறையாக கற்பதற்கு அவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். வசதியற்ற தோட்டப்புற ஏழை இந்திய மாணவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலையை முற்றிலும் மாற்றி அமைப்பதற்கு இன்றியமையாதது அவர்களுக்காக தங்கும் விடுதி அமைப்பதாகும் என்று அந்த அறிமுக விழாவில் உரையாற்றிய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.

asrama_selangor_0310 போராட்டவாதிகளுக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிப்பு!

150 ஆண்டுகளுக்கு மேலாக தோட்டப் பாட்டாளிகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன்றும் இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகப் பல்வேறு கோணங்களில், பல்வேறு அமைப்புகள் மூலமாக போராட்டம் நடத்திய போராட்டவாதிகள் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.

போராட்டவாதிகளான ஜானகி இராமன், டாக்டர் நசீர் முகமட், இராம தனபாலன், பன்னீர் செல்வம், எஸ். அருள்செல்வன், நோக்கையா, சுப்பையா, இரா. அருட்சுனன், அன்பரசி முனியாண்டி, பால் சின்னப்பன் ஆகியோருக்கு டாக்டர் சேவியர் ஜெயக்குமார் பொன்னாடை போர்த்தி தங்கப் பதக்கம் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

இவ்வாறு போராட்டவாதிகளைக் கௌரவிக்கும் ஒரே அரசு பக்கத்தான் அரசு மட்டுமே என்று 10 போராட்டவாதிகளை அறிமுகப்படித்தியபோது கூறப்பட்டது.

 

TAGS: