நேற்று நாடாளுமன்றத்தில் இரண்டு மணி நேரம் நிகழ்த்திய பட்ஜெட் உரையில், பிரதமர் நஜிப் எதிர்பார்த்தவாறு பல அன்பளிப்புகளை வழங்கினார். அவை தலைப்புச் செய்திகளாக வெளியிடப்பட்டன. ஆனால், அவற்றின் பின்னால் மறைந்திருக்கும் அந்தரங்க கூட்டாளித்துவமும் மற்றும் தவறானவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள முன்னுரிமைகளும் வெளிப்பட்டன என்று கூறினார் செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங்.
அக்டோபர் 2010 இல் தாக்கல் செய்யப்பட்ட 2011 க்கான பட்ஜெட்டில் பிளஸ்சுக்குச் சொந்தமான நான்கு நெடுஞ்சாலை டோல் கட்டணங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முடக்கப்படும் என்று நஜிப் கூறினார். இந்த ஆண்டு ஜனவரியில் போக்குவரத்து செலவுகள் குறித்த மறுஆய்வுக்குப் பின்னர் மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் பல டோல் கட்டண செயல்பாடுகள் மறுஆக்கம் செய்யப்படும் என்றும் நஜிப் கூறியிருந்தார்.
ஆனால், உண்மை இதுதான்: நெடுஞ்சாலை பராமரிப்பாளர்களுக்கு 2011 இல் வழங்கப்பட்ட ரிம200 மில்லியன் இழப்பீடு ரிம343 மில்லியனாக அதிகரித்துள்ளது, 71.5 விழுக்காடு உயர்வு! ஆக, நஜிப் கூறும் பெருமாற்றம் மற்றும் மறுமாற்றம் ஆகிய அனைத்தும் வானகப் பயனீட்டாளர்களின் நிதிச் சுமையை வரிசெலுத்தும் மலேசிய மக்களிடம் மாற்றி விடுவதற்கான வஞ்சகத் திட்டங்களாகும்.
2012 ஆண்டுக்கான பட்ஜெட்டில் தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகளுக்கான கட்டணங்கள் 2012 ஆண்டிலிருந்து அகற்றப்படும் என்றும் பள்ளிகளின் சுற்றுப்புறங்கள் மேம்பாட்டிற்காக ரிம1 பில்லியன் ஒதுக்கப்படும் என்றும் நஜிப் கூறினார்.
ஆனால், அந்த உரையில் அவர் தமது வசதிக்காக சொல்லாமல் விட்டுவிட்டது இதுதான்: 2010 ஆண்டில் கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றின் மேம்பாட்டிற்கான மத்திய அரசாங்கத்தின் செலவு ரிம12 பில்லியன். அது இப்போது ரிம8.5 பில்லியனான (கிட்டத்தட்ட 30 விழுக்காடு) குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு:புதிய பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கு குறைவான நிதி ஒதுக்கீடு.
தீவகற்ப மலேசிய நகர் மற்றும் நாட்டுப்புற திட்டமிடல் இலாகாவின் வழிகாட்டல் விதிகளுக்கு ஏற்ப 7,500 மக்களைக் கொண்ட இடத்தில் ஒரு தொடக்கப்பள்ளியும், 15,000 மக்களைக் கொண்ட இடத்தில் ஓர் இடைநிலைப்பள்ளியும் கட்ட வேண்டும்.
இதன்படி, 2015 ஆண்டு வாக்கில் காஜாங் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 9 புதிய இடைநிலைப்பள்ளிகளும், 18 தொடக்கப்பள்ளிகளும் நமக்குத் தேவைப்படும்.
அதுமட்டுமல்ல. பேறுகுறைந்த குழந்தைகளுக்காக சிறப்பு கல்வி நிலையங்கள் நமது நாட்டிற்கு தேவைப்படுகின்றன. தற்போது அவ்வாறான 21 நிலையங்கள் சிங்கப்பூரில் இருக்கின்றன. ஆனால், மலேசியாவில் 32தான் இருக்கின்றன. மலேசியா நமது தென்புற அண்டை நாட்டைவிட சுமார் 500 மடங்கு பெரியதாகும்.
தற்காப்பு மேம்பாட்டிற்கான மலேசிய அரசாங்கத்தின் மொத்த செலவு ரிம2.6 பில்லியனுலிருந்து ரிம3.6 பில்லியனாக உயர்ந்திருப்பது எனக்கு மேலும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. தேசிய பாதுகாப்புக்கு உடனடியான மருட்டல் எதனையும் மலேசியா எதிர்கொண்டிருக்கவில்லை.
பிஎன் அதன் முன்னுரிமைத் திட்டங்களை மறுஆய்வு செய்ய வேண்டும், இல்லையேல் அரசாங்கம் என்ற அதன் தகுதி விரைவில் மாற்றப்படலாம்.