எரியூட்டுவேன் எனச் சொன்னதற்காக வோங் தாக் மன்னிப்புக் கேட்டார்

wongகடந்த சில நாட்களில் பெரும் சர்ச்சையை மூட்டி விட்ட ஹிம்புனான் ஹிஜாவ் இயக்கத் தலைவர் வோங் தாக்,  லைனாஸ் அரிய  மண் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எரியூட்டப் போவதாக தான் சொன்னது தவறு என ஒப்புக் கொண்டுள்ளார்.

தமது கருத்து இளைய தலைமுறை மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்பதால் தாம் “இரண்டு முறை 90 பாகை குனிந்து” எல்லா மலேசியர்களிடமும்  முழுமையாக மன்னிப்புக் கேட்பதாக அவர் குவாந்தானில் நேற்றிரவு கூட்டம் ஒன்றில் கூறினார்.

அந்த டிஏபி செராமாவில் பேசிய வோங், ‘தாம் தவறு செய்து விட்டேன்’ எனச் சொன்னதாக சின் சியூ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.wong1

“நான் முறையில்லாத அறிக்கையை வெளியிட்டு விட்டதாக நான் நினைக்கிறேன். அது போன்ற உணர்ச்சிகரமான பேச்சு பாதகமான தாக்கத்தைக் குறிப்பாக நமது இளைய தலைமுறையினர் மீது ஏற்படுத்தி விடும்.”

வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் லைனாஸ் தொழில் கூடம் இயங்குமானால் அதற்கு தாம் எரியூட்டப் போவதாக கடந்த திங்கட்கிழமை வோங் கூறியிருந்தார்.

குவாந்தான் கெபெங்கில் அந்த  லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது.

பிஎன் தொடர்ந்து ஆட்சி செய்தாலும் அல்லது புதிய அரசாங்கத்தை பக்காத்தான் ராக்யாட் அமைத்தாலும் தேர்தலுக்குப் பின்னர் 30 நாட்களில் அந்த தொழில் கூடம் மூடப்படா விட்டால் தாமே நேரடியாக அதற்கு எரியூட்டப் போவதாக வோங் அப்போது சொன்னார்.

TAGS: