நோங் சிக்-கின் லெம்பா பந்தாய் போராட்டத்தில் ஷாரிஸாட் நிழல் பின் தொடருகிறது

Raja“வாக்காளர்கள் எந்த ஒரு ஊழலையும் பொருட்படுத்தக் கூடாது என ராஜா நோங் சிக் சொல்கிறார். இது தான் புதிய வழக்கமா ? அல்லது ஊழல்களை நாம் பொருட்படுத்தாத அளவுக்கு நாம் என்ன ஜடங்களா (உணர்வு இல்லாதவர்களா) ?”

என்எப்சி ஊழல் தம்மைப் பாதிக்காது என்கிறார் நோங் சிக்

சின்ன அரக்கன்: “வாக்காளர்கள் எந்த ஊழலையும் பொருட்படுத்தக் கூடாது” என எவ்வளவு துணிச்சலாக கூட்டரசுப் பிரதேச, நகர்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங் சின் ராஜா ஜைனல் அபிடின் சொல்கிறார் பார்த்தீர்களா ?

என்றாலும் அதனை மீண்டும் சிந்தித்தால் அவர் சொன்னது சரியாகவும் இருக்கலாம். தங்களது பிஎன் சகாக்களும் உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட ஊழல்கள் பற்றி கவலைப்படாத “தடித்த தோலை” கொண்ட பிஎன் அரசியல்வாதிகளைக் கொண்ட அதிகார வர்க்கத்தை அவரும் சேர்ந்தவர்தானே ?

50 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரத்தில் இருந்து விட்ட பிஎன் அரசியல்வாதிகள் வேண்டுமானால்  தங்களை உலுக்குகின்ற ஊழலைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம்.

ஆனால் பில்லியன் கணக்கான ரிங்கிட் பெறும் செல்வத்தையும் வளங்களையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள அந்த ஊழல்கள் குறித்த மக்களுடைய பொறுமை முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. 

ராஜா நோங் சிக் லெம்பா பந்தாயில் போட்டியிட முடிவு செய்தால் அவருக்கு பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கடும் எதிர்ப்பைக் கொடுப்பது திண்ணம். 13வது பொதுத் தேர்தலில் நுருல் இஸ்ஸா தோல்வி கண்டாலும் அவர் மீது நான் வைத்துள்ள மரியாதை குறையாது.

சியோங் சாய் பா: வாக்காளர்கள் எந்த ஒரு ஊழலையும் பொருட்படுத்தக் கூடாது என ராஜா நோங் சிக்சொல்கிறார். இதுதான் புதிய வழக்கமா ? அல்லது ஊழல்களை நாம் பொருட்படுத்தாத அளவுக்கு நாம் என்ன ஜடங்களா (உணர்வு இல்லாதவர்களா) ?

ஆகவே ராஜா நோங் சிக்-கிற்கு நாம் வாக்களித்தாலும் ஊழல்களை நாம் பொருட்படுத்தக் கூடாது என அர்த்தமா ? நாம் அந்த அளவுக்கு தாழ்ந்து போகக் கூடாது.

பி தேவ் ஆனந்த் பிள்ளை: நாம் வரிகள் வழி ஒவ்வொரு ஆண்டும் கூட்டரசு கருவூலத்துக் கொடுக்கும் பணத்தை கொள்ளையடிப்பதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என அந்த அமைச்சர் சொல்ல வருகிறாரா ? அதே வேளையில் அவரது பிஎன் சகாக்கள் மாபெரும் திட்டங்கள் வழி முடிந்த வரை கருவூலத்திருந்து உறிஞ்சுக் கொண்டிருப்பதை நாம் அனுமதிக்க வேண்டுமா ?

அமைச்சர் அவர்களே, நாங்கள் நீண்ட காலமாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம். நாங்கள் இந்த முறை வாக்குப் பெட்டி வழி பதிலடி கொடுப்போம். இது பாம்பு ஆண்டு. பாம்பு எப்போது தாக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது.

புத்திசாலி வாக்காளர்: அந்த மனிதர் பிரதிநிதிக்கும் கட்சி வெட்கமில்லாதது. நாகரீகம் இல்லாதது என்றவருணனையே பொருத்தமானது. அவர் நாகரீகமான மனிதராக இருக்கலாம். ஆனால் என்எப்சி ஊழலுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என அவர் கருதினால் அது தவறு.

உங்கள் அடிச்சுவட்டில்: ராஜா நோங் சிக் அவர்களே, “ஷாரிஸாட் ஜலில் ஊழலுக்கும் எனக்கும் தொடர்பில்லைஎன ஏறத்தாழ நீங்கள் சொல்லி விட்டதை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா ? நான் அவரைப் போன்று இல்லை என நீங்கள் கூறியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

அம்னோ மகளிர் தலைவியான ஷாரிஸாட் ஊழல் புரிந்துள்ளதை நீங்கள் ஒப்புக் கொண்டு விட்டீர்கள். அவர் இந்த நாட்டை ஆளும் உங்கள் கட்சியைச் சார்ந்தவர்.

இந்த நாட்டை பல ஆண்டுகளாக பாழாக்கி வரும் கட்சியைச் சார்ந்த உங்களுக்கு வாக்களிக்குமாறு நீங்கள் எங்களை  இப்போது கேட்டுக் கொள்கின்றீர்கள். விவேகமான அரசியல்வாதிகள் எங்களுக்குக் கிடைக்க மாட்டார்களா ?

பெர்ட் தான்:  “வாக்காளர்கள் எந்த ஒரு ஊழலையும் பொருட்படுத்தக் கூடாது என ராஜாநோங் சிக் சொல்வதை” பெரும்பாலான மலேசியாகினி வாசகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

மக்கள் இப்போது புத்திசாலிகளாகி விட்டார்கள். எது தவறு எது சரி என்பது அவர்களுக்குத் தெரியும். உங்கள் பிஎன் சகாக்கள் செய்த ஊழல்களைப் பொருட்படுத்தக் கூடாது என நீங்கள் எப்படிச் சொல்ல முடியும் ?

ஊழல் மலிந்த அந்த முறையில் நீங்களும் ஒர் அங்கம். எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் நாடு முழுவதும் நடத்தும் செராமாக்களில் ஒரு விஷயத்தை- அதாவது நாங்கள் மாற்றுவதற்குப் போராடுவது அந்த முறையையே எனத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்.

TAGS: