அஞ்சல் வழி வாக்களிக்க 1,700 வெளிநாட்டு மலேசியர்கள் பதிந்து கொண்டுள்ளனர்

undi-posஅஞ்சல் வழி வாக்களிப்பதற்கு இது வரையில் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களிடமிருந்து 1,779 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இணையம் மூலம் பதிவு செய்து கொள்ளும் அந்த நடவடிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி தொடங்கியது.

அந்த விண்ணப்பங்களில் அதிகமானவை ஆஸ்திரேலியாவிலிருந்து கிடைத்தவை என தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூறினார். ஆஸ்திரேலியாவிலிருந்து 406, பிரிட்டனிலிருந்து 323, அமெரிக்காவிலிருந்து 131, சீனாவிலிருந்து 104, கத்தாரிலிருந்து 91 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அவர் சொன்னார்.

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் இணையம் வழியாகவும் மின் அஞ்சல் வழியாகவும் பதிந்து கொள்வதற்கு அனுமதிக்கும் இசி முடிவு பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றும் பலர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அன்றாடம் 100 வெளிநாட்டு மலேசியர்கள் இசி-யிடம் பதிந்து கொள்வர் என நாங்கள் மதிப்ப்பிட்டுள்ளோம். அந்த நிலை தொடர்ந்து மேலும் அதிகரிக்கும் என நாங்கள் நம்புகிறோம்,” என பெர்னாமா தொலைக்காட்சி நேற்றிரவு ஒளிபரப்பிய ஹலோ மலேசியா நிகழ்ச்சியில் வான் அகமட் சொன்னார்.

வெளிநாட்டிலிருந்து வாக்களிப்பதற்கு ஒருவர், வாக்காளராக ஏற்கனவே பதிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதும் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக ஐந்து ஆண்டுகளில் மலேசியாவுக்குத் திரும்பி 30 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்பதும் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் அடங்கும்.

வாக்காளர்களாகப் பதிந்து கொண்டுள்ள அஞ்சல் வழி வாக்களிக்க விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் இசி-யின்  www.spr.gov.my இணையத் தளத்திலிருந்து விண்ணப்ப பாரத்தை (Borang 1B) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பெர்னாமா

 

TAGS: