அண்மையில் சபாவைச் சேர்ந்த ஒர் அரசு சாரா அமைப்பு பிஎன் -னுக்கு பிரச்சாரம் செய்திருப்பதால் அதனை வரும் பொதுத் தேர்தலில் பார்வையாளராக இருப்பதிலிருந்து விலக்கி வைக்குமாறு சபா பெர்சே தேர்தல் ஆணையத்தைக் (இசி) கேட்டுக் கொண்டிருக்கிறது.
“தேர்தல் பார்வையாளர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் பிரச்சாரம் செய்யக் கூடாது. அவர்கள் சுயேச்சையானவர்களாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளே அரசியல் பிரச்சாரத்தை நடத்த வேண்டும். தேர்தல் பார்வையாளர்கள் அல்ல,” என சபா பெர்சே பேச்சாளர் அண்ட்ரூ அம்புரோஸ் கூறினார்.
“FCAS என அழைக்கப்படும் சபா சீனர் சங்க சம்மேளனம் ஏன் பகிரங்கமாக அரசியல் பிரச்சாரத்தை நடத்துகிறது. அதே வேளையில் இசி அதனை ஏன் பார்வையாளராக நியமிக்கிறது ?”
முதலமைச்சர் மூசா அமான் தலைமையிலான பாரிசான் நேசனல் மாநில அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிக்குமாறு FCAS இடைக்காலத் தலைவர் டிசி கோ சீன சமூகத்தை அணமையில் கேட்டுக் கொண்டார்.
சீனப் புத்தாண்டை ஒட்டி விடுத்துள்ள செய்தியில் கோ, முதலமைச்சர் நல்ல பணிகளைச் செய்து வருவதாக பாராட்டியுள்ளார். அந்தச் செய்தி தி நியூ சபா டைம்ஸில் வெளியாகியுள்ளது.
“சீன சமூகத்துக்கு குறிப்பாக கல்வி, பண்பாடு, விளையாட்டு, சமய மேம்பாடு ஆகிய துறைகளில் தொடர்ந்து ஆதரவளித்து வரும் மூசா தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் பிஎன் அரசாங்கத்துக்கு சீன சமூகத்தின் சார்பில் நன்றி சொல்வது பொருத்தமாக இருக்கும்,” என அவர் சொன்னதாக அந்த ஏட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய சட்டங்கள், அனைத்துலகத் தரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தல் நடைமுறைகளை மதிப்பீடு செய்யும் சுயேச்சை அமைப்பாக FCAS செயல்பட வேண்டும் என அம்புரோஸ் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்தார்.
FCAS-ன் அறிக்கைக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் “சுயேச்சையாக, பாரபட்சமின்றி நடந்து கொள்வது என்றால் என்ன என்பதை அதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவரது அறிக்கை குறிப்பிட்டது.
“FCAS இன்னொரு அரசியல் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் முன்னர் அதன் தேர்தல் பார்வையாளர் நியமனத்தைப் பொது மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்,” என அம்புரோஸ் மேலும் கூறினார்.