வான் அகமட்: சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படுவது பற்றி இசி-க்கு தெரிவிக்கப்படவில்லை

wan13வது பொதுத் தேர்தலிலிருந்து தனியாக மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவததற்கு எதிர்த்தரப்புக் கூட்டணியின் கீழ் உள்ள மாநிலங்களிடமிருந்து எந்த யோசனையும் அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு (இசி) வரவில்லை என அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூறுகிறார்.

“எடுத்துக்காட்டுக்கு சிலாங்கூர் அரசாங்கம் எங்களிடம் எதுவுமே தெரிவிக்கவில்லை. நாங்கள் சாப் கோ மே-க்குப் பின்னர் வரை காத்திருப்போம். மாநில அரசாங்கம் சட்டமன்றத்தைக் கலைக்கிறதா என்பதைப் பார்போம்.”

“இசி சட்டத்திற்கு இணங்க தனது கடமைகளைச் செய்யும்,” என அவர் நேற்றிரவு பெர்னாமா தொலைக்காட்சியின் ஹலோ மலேசியா நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதை அரசியலாக்கக் கூடாது என வலியுறுத்திய அவர், அவ்வாறு செய்வதற்கு மாநில அரசாங்கத்துக்கு உரிமை உண்டு என்றார்.

“ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு சுல்தானுடைய ஒப்புதல் கிடைக்க வேண்டும். அது நடைமுறையாக இருந்தாலும் நாம் அரச அதிகாரத்தை மதிக்க வேண்டும்,” என்றார் அவர்.

அத்துடன் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் தனியாக நடத்தப்பட்டால் செலவும் அதிகமாகும். பள்ளிக்கூடங்களில் வகுப்புக்களும் பாதிக்கப்படும் என்றும் வான் அகமட் குறிப்பிட்டார்.

“அது அதிகமான செலவுகளைக் கொண்டு வரும். தேர்தல் ஊழியர்களாகவும் வேலை செய்யும் பள்ளி ஆசிரியர்கள் இரண்டு முறை கடமையாற்ற வேண்டும். வாக்களிப்பு மய்யங்களாக பயன்படுத்தப்படும் பள்ளிக்கூடங்களையும் மூட வேண்டியிருக்கும்,” என்றார் அவர்.

மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டாலும் இறுதித் தேதியை முடிவு செய்வது இசி அதிகாரத்துக்கு உட்பட்டதாகும். ஆகவே நெருங்கி வரும் 13வது பொதுத் தேர்தலுடன் மாநிலத் தேர்தல்களை நடத்துவது தான் நல்லது என்றும் இசி  துணைத் தலைவர் சொன்னார்.

“சிலாங்கூர் மாநில அரசமைப்பான சிலாங்கூர் மாநில அமைப்புச் சட்டங்களின் கீழ் மாநிலச் சட்டமன்றம் முன் கூட்டியே கலைக்கப்பட்டால் கலைக்கப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.”

இதனிடையே வரும் பொதுத் தேர்தல் மிகவும் கறைபடிந்ததாக இருக்கும் எனக் கூறப்படுவதை நிராகரித்த வான் அகமட், பல மாற்றங்களும் திருத்தங்களும் அமலாக்கப்பட்ட வரலாற்றுப்பூர்வ நிகழ்வாக வரும் தேர்தல் அமையும் என்றார்.

அழியாத மையைப் பயன்படுத்துவது, முன் கூட்டியே வாக்களிப்பது, எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஊடகங்களில் இடம் அளிப்பது, உள்நாட்டு, ஆசியான் பார்வையாளர்கள் ஆகியவை மாற்றங்களில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

“தேசியப் பதிவுத் துறையின் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு அன்றாடம் இசி வாக்காளர் பட்டியலை புதுப்பித்து வருகிறது,” என்றும் வான் அகமட் தெரிவித்தார்.

“உலகில் எந்த இடத்திலும் 100 விழுக்காடு தூய்மையான வாக்காளர் பட்டியலை வைத்திருப்பது முடியாத காரியமாகும். ஆனால் இசி முடிந்த வரை தூய்மையானதாக வைத்திருக்க எண்ணம் கொண்டுள்ளது,” என்றார் அவர்.

13வது பொதுத் தேர்தலின் போது ஊழல், லஞ்சம், மற்ற தொடர்புடைய விஷயங்கள் மீது தகவல் அல்லது ஆதாரத்தை வைத்துள்ள எவரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பெர்னாமா

TAGS: