இவ்வாண்டு கூட்டரசு கடன் தொகை அளவு 455.75 பில்லியன் ரிங்கிட் ஆகும். கடந்த ஆண்டு அளவுடன் ஒப்பிடுகையில் அது 11.9 விழுக்காடு அதிகமாகும். அதனால் 2012ல் செலுத்த வேண்டிய வட்டித் தொகையும் 1.94 பில்லியன் ரிங்கிட்டை எட்டும்.
அந்த அதிகரிப்பில் பெரும்பகுதி உள்நாட்டுக் கடன்கள் என 2010/2011க்கான பொருளாதார அறிக்கை குறிப்பிடுகிறது. “நிதி அளிப்புத் தேவைகளைச் சமாளிப்பதற்கு அதிக அளவில் கடன் பெறப்பட்டதே அதற்குக் காரணம்” என அது தெரிவித்தது.
நடப்பு நிலையில் கூட்டரசுக் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் 53.8 விழுக்காடாக இருக்கிறது. 2011-உடன் ஒப்பிடுகையில் இது 0.7 விழுக்காடு மட்டுமே உயர்வாகும்.
“அண்மைய ஆண்டுகளில் கடன் அளவு கூடிய போதிலும் வட்டியைச் செலுத்துவதற்கான ஆற்றல் தொடர்ந்து சமாளிக்கக் கூடிய நிலையிலேயே இருந்து வருகிறது. அத்துடன் விவேகமான அளவுக்குள்ளும் அது வைக்கப்பட்டுள்ளது.
“வட்டி அளவு மொத்த வருமானத்தில் 10.1 விழுக்காடாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும். (2010ல் அந்த விகிதம் 9.8 விழுக்காடு). அது சமாளிக்க கூடியது. உற்பத்தியை மேம்படுத்தும் திட்டங்களை எந்த வகையிலும் பாதிக்காது”, என அந்த அறிக்கை மேலும் கூறியது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூட்டரசுக் கடன் அளவு 55 விழுக்காட்டுக்கு மேல் போகாமல் இருப்பதையும் வட்டிச் செலவுகள் 15 விழுக்காக்காட்டுக்குள் இருப்பதையும் உறுதி செய்வதற்கு நிதி விதிமுறைகள் “கடுமையாகப் பின்பற்றப்படும்”.
2011ம் ஆண்டு கடன் அளவு கூடியதற்கு முக்கியக் காரணம் 28.39 பில்லியன் ரிங்கிட் பெறும் அரசாங்க முதலீட்டு பத்திரங்கள் வெளியிடப்பட்டது முக்கியமான காரணமாகும்.
அரசாங்கக் கடன் பத்திரங்களின் அளவும் 6.4 விழுக்காடு கூடி இவ்வாண்டு 16.72 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது.
அரசாங்க கடன்களில் அந்நியக் கடன்கள் மிகச் சிறிய பகுதியே என்றும் அந்த அறிக்கை கூறியது. சந்தைக் கடன் அளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 745 மில்லியன் ரிங்கிட் அதிகரித்தன.
வளர்ச்சித் திட்டங்களுக்காக பெறப்பட்ட கடன் அளவு 2.8 விழுக்காடு கூடி இவ்வாண்டு 7.2 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது.
கடன் பத்திரங்கள் அதிகரித்துள்ளதால் 2012ல் கொடுக்கப்பட வேண்டிய வட்டி மதிப்பு 20.45 பில்லியன் ரிங்கிட்டாக கூடும் என கூட்டரசு செலவின அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலதனச் சந்தையில் நிதி திரட்டுவதற்காக அரசாங்கம் வெளியிடும் கடன் ஆவணங்கள், கடன் பத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. அவற்றை சந்தையில் விற்க முடியும். வாங்க முடியும்.
1970களிலும் 1980களிலும் பொதுத் துறை மேம்பாட்டுச் செலவுகளை சமாளிப்பதற்காக அவை வெளியிடப்பட்டன. வரவு செலவுப் பற்றாக்குறையை நிலை நிறுத்தவும் 1990களில் அந்நியக் கடன்களை முன் கூட்டியே செலுத்துவதற்கும் அவை பயன்படுத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஊழியர் சேம நிதிக்கு வட்டித் தொகையாக 2.04 பில்லியன் ரிங்கிட் செலுத்தப்படும். இது நடப்பு ஆண்டை விட 14.68 விழுக்காடு அதிகமாகும்.
அரசாங்கம் செலுத்த வேண்டிய வட்டித் தொகையில் பெரும்பகுதி அரசாங்கம் வெளியிட்ட முதலீட்டுக் கடன்பத்திரங்களுக்கு செல்கிறது. 2011 புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில் அது 751.17 மில்லியன் ரிங்கிட் அதிகரித்து 4.94 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும்.
குடும்பக் கடன்கள் (Household debts )உயர்வாக உள்ளன
இவ்வாண்டு குடும்பக் கடன் அளவு 524.9 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது என 2010/2011ம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை தெரிவித்தது. அந்த அளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.7 விழுக்காடு கூடுதலாகும்.
2011 ஜுலை மாத இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 77.2 விழுக்காட்டை மொத்தக் குடும்பக் கடன்கள் குறித்தன. அது கவலை அளிக்கும் விஷயமாகும். ஆனால் அந்த அளவு “சமாளிக்கக் கூடிய நிலையில்” இருப்பதாக பொருளாதார அறிக்கை கூறுகிறது.
“மொத்த குடும்பக் கடன்களில் பாதிக்கும் மேற்பட்டவை குடியிருப்புச் சொத்துக்களையும் (45 விழுக்காடு) வாகனங்களையும் அடமானமாகக் கொண்டவை என்பதால் அவை சமாளிக்கும் நிலையில் இருப்பதற்குக் காரணம்” என அது குறிப்பிட்டது.
கிரடிட் கார்டு செலவுகள் 2011ம் ஆண்டும் தொடர்ந்தும் கூடியிருப்பது கவலை அளிக்கிறது. இவ்வாண்டு முதல் ஏழு மாதங்களில் மட்டும் மொத்த கிரடிட் கார்டு பரிவர்த்தனை அளவு 11.8 விழுக்காடு கூடி 50.3 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது.
அதே வேளையில் கிரடிட் கார்டுகளுக்கு 2010ம் ஆண்டு சேவை வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிரடிட் கார்டு விநியோகம் சரிவு கண்டது.
“2011ம் ஆண்டு ஜுலை இறுதியில் 8.3 மில்லியன் கார்டுகளே புழக்கத்தில் இருந்தன. அந்த எண்ணிக்கை 2009 அக்டோபார் மாதத்துடன் ஒப்பிடுகையில் 26 விழுக்காடு வீழ்ச்சியைக் குறித்தது”, என அந்த அறிக்கை கூறியது.