மலேசியர்கள் தங்கள் வாக்குகளைப் பெறுவதற்குப் போராடும் எந்தக் கூட்டணிக்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொடுக்கக் கூடாது என்பதற்கு மிகவும் வலுவான காரணத்தை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வழங்கியுள்ளதாக கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் கூறுகிறார்.
“ஏனெனில் அத்தகைய பெரும்பான்மை மெர்தேக்கா அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை மலேசியர்களிடமிருந்து பறிப்பதற்கு வழி வகுத்து விடும்,” என மலாக்கா, ஜோகூர் கத்தோலிக்க திருச்சபைத் தலைவருமான அவர் சொன்னார்.
தேசியப் பாதுகாப்பு அரசமைப்பு மீது கடந்த வாரம் நடந்த ஆய்வரங்கு ஒன்றில் மகாதீர் தெரிவித்த கருத்துக்கள் பற்றி ஆயர் பால் தான் கருத்துரைத்தார்.
பிஎன் -னுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொடுப்பதின் மூலம் அரசாங்கம் அரசமைப்பைத் திருத்தி அரசாங்கத்தைக் குறை கூறுகின்ற அம்பிகா ஸ்ரீனிவாசன் போன்றவர்களுடைய குடியுரிமையை பறிக்க முடியும் என மகாதீர் சொன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“இப்போது டாக்டர் மகாதீர் வெளியிட்டு வருகின்ற அபத்தங்கள் குறித்து மக்கள் வெறுப்படைந்துள்ளனர். என்றாலும் அதில் ஒரு நன்மை கிடைத்துள்ளதாக நான் எண்ணுகிறேன்,” என ஆயர் பால் தான் சொன்னார்.
பிஎன் -னுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொடுப்பதின் மூலம் அரசாங்கம் அரசமைப்பைத் திருத்தி அரசாங்கத்தைக் குறை கூறுகின்றவர்களுடைய குடியுரிமையை பறிக்க முடியும் என அவர் சொல்லும் போது ஒரு கூட்டணி அப்பட்டமாக அத்துமீறல்களில் ஈடுபடுவதற்கு அதற்கு அதிகாரத்தைக் கொடுக்கக் கூடாது என்பதை மக்கள் உணர வேண்டும்.”
“மகாதீர் இப்போது சர்வாதிகாரி போல வார்த்தைகளை கொட்டிக் கொண்டு எல்லா விஷயங்களிலும் தலையிடுகிறார்,” என்றும் ஆயர் பால் தான் தெரிவித்தார்.
“ஒருவர் அப்படிப் பேசும் போது எந்த ஒரு கட்சிக்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுக்கக் கூடாது என்பதையும் எந்த ஒரு தலைவரும் நீண்ட காலத்துக்கு அதிகாரத்தில் இருக்க அனுமதிக்கக் கூடாது என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த இரண்டு சூழ்நிலைகளும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழி வகுத்து விடும்,” என ஆயர் பால் தான் கூறினார்.