பிகேஆர் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார், தம்மைப் பற்றி ராஜா நொங் சிக் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துரைக்க அவரைத் தம்முடன் விவாதமிட அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதம் இன்று காலை புத்ரா ஜெயாவில் உள்ள கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சுக்கு அனுப்பப்பட்டு அமைச்சின் உதவித் தலைமைச் செயலாளர் கலிலுல் ரஹ்மான் கமருல்ஜமான் அதைப் பெற்றுக்கொண்டார் என நுருலின் உதவியாளர் பாஹ்மி பாட்சில் கூறினார்.
கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சரும் லெம்பா பந்தாய் அம்னோ தொகுதித் தலைவருமான ராஜா நொங் சிக், எதிர்வரும் பொதுத் தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது.
விவாதத்தை பிப்ரவரி 24-இல், பந்தாய் டாலாமில் உள்ள பந்தாய் பெர்மாய் அடுக்குமாடி வீடுகளில் வைத்துக்கொள்ளலாம் என்று கடிதத்தில் முன்மொழிந்திருப்பதாக பாஹ்மி கூறினார்.
“நுருல் இஸ்ஸா தம் தொகுதியில் எதுவும் செய்வதில்லை என்று ராஜா நொங் சிக் கூறியிருக்கிறார். அதனால்தான் அவருக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளோம். இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. எங்களின் பதிவேடுகளின்படி அவர் (நுருல்) பல பிரச்னைகளைத் தீர்த்து வைத்திருக்கிறார்”, என்று பாஹ்மி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“ராஜா நொங் சிக்(வலம்) மைய நீரோட்ட ஊடகங்களில் அக்குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தார்”.
கல்வியாளர் ஒருவரை நடுவராக வைத்து விவாதத்தை நடத்தலாம் என்று பாஹ்மி கூறினார்.
லெம்பா பந்தாய் மக்களுக்குச் சேவை செய்யாமல் தம்மைக் குறை சொல்வதில்தான் பெரும்பகுதி நேரத்தைச் செலவிடுகிறார் என்று ராஜா நொங் சிக் கூறியதை மறுக்க அவரைத் தம்முடன் விவாதமிட அழைத்தார் நுருல் இஸ்ஸா. முதன்முதலில் பிப்ரவரி 8-இல் அச்சவால் விடுக்கப்பட்டது.
ஆனால், ராஜா நொங் சிக் அதை ஏற்கவில்லை.