தீபக்: பிரதமர் பற்றிய தகவலைச் சொல்வதற்கு சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்குக் கோருகிறார்

deepakபிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் “அதிகார அத்துமீறல், ஊழல்” எனக் கூறப்படுவது மீது மேலும் தகவல்களை வழங்குவதற்கு ஈடாக தாம் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என சர்ச்சைக்குரிய கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் கோருகிறார்.

புத்ராஜெயாவில் இன்று நண்பகல் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்ட கடிதம் ஒன்றில் தீபக் அந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இந்த நாட்டின் தலையாய தலைவர் செய்துள்ள ‘அதிகாரத் துஷ்பிரயோகம்’ தொடர்பாக கூடுதல் தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கத் தாம் தயாராக இருப்பதாக தீபக் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு எந்த கிரிமினல் வழக்கு நடவடிக்கையிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு, விலக்குச் சான்றிதழ் கொடுக்கப்படும் நிபந்தனையின் பேரில் பிரதமரது குடும்பம் தொடர்பான அதிகாரத் துஷ்பிரயோகத்தில் அவரது ஈடுபாடு பற்றி கூடுதல் தகவல்களை வழங்குவதில் நான் எந்த ஒரு அமலாக்க நிறுவனத்துடனும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன்,” என்றும் தீபக் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தை வழங்கச் சென்ற தீபாக்குடன் பாஸ் கட்சியின் உதவித் தலைவர் மாபுஸ் ஒமாரும் உடனிருந்தார்.

சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனியின் பிரதிநிதி அக்கடிதத்தைப் பெற்றுக் கொண்டதாக தீபக் மலேசியகினியிடம் பின்னர் கூறினார்.

தமது கோரிக்கைக்கு பதில் அளிக்க சட்டத்துறைத் தலைவருக்கு மார்ச் 11 வரையில் கால அவகாசம் தருவதாக தீபக் மேலும் கூறினார். அன்று அவரது பிறந்த நாளாகும்.

 

 

 

 

TAGS: