ஏழை இந்தியர்கள் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கை மன்றம் வழங்கிய ஐந்தாண்டு பெருந்திட்டத்தை அங்கீகரிப்பதில் பக்காத்தான் ராக்யாட் காட்டும் நீண்ட தாமதம், வரும் பொதுத் தேர்தலில் அந்தக் கூட்டணிக்கான ஆதரவை ஹிண்ட்ராப் மீட்டுக் கொள்ள வழிகோலி விடும் என ஹிண்டராப் எச்சரித்துள்ளது
2012ம் ஆண்டு நவம்பர் தொடக்கம் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் உட்பட இரு தரப்புக்களும் நடத்திய பேச்சுக்கள் உட்பட ஹிண்ட்ராப்புடன் பேச்சு நடத்த பக்காத்தான் தொடக்கத்தில் ஆர்வம் காட்டிய போதிலும் ‘முன்னேற்றத்தைக் காட்டுவதற்கு எதுவுமில்லை’ என்றும் அது கூறியது.
தேசிய மேம்பாட்டு நீரோட்டத்தில் ஏழை மலேசிய இந்தியர்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்ட ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை விவாதிப்பதற்காக அந்தக் கூட்டங்கள் நடைபெற்றதாக ஹிண்டராப் தேசியச் செயலாளர் பி ரமேஷ் சொன்னார்.
அந்தப் பெருந்திட்டம் “பொருளாதார ரீதியில் அரசியல் ரீதியில் தார்மீக ரீதியில்” நியாயமானது என அவர் வருணித்தார்.
“அந்தப் பெருந்திட்டத்தை பக்காத்தான் அங்கீகரிப்பதைப் பொறுத்தே 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தானுக்கான ஆதரவு இருக்கும் என ஹிண்டராப் தொடக்கத்திலிருந்தே பக்காத்தானிடம் தெளிவாகக் கூறி வந்துள்ளது,” என ரமேஷ் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.
என்றாலும் அந்தப் பெருந்திட்டத்தை அங்கீகரிப்பதில் பக்காத்தான் காட்டும் நீண்ட தாமதம் குறித்தும் அது ஹிண்ட்ராப்புடன் தேர்தல் கூட்டணியை அமைத்துக் கொள்வது குறித்தும் நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம்.”
“இது மலேசிய அரசியல் வடிவமைப்பில் மாற்றத்தைக் காண விரும்பும் எல்லாத் தரப்புக்களுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும்.”
“பக்காத்தான் தலைமைத்துவம் பின்பற்றுகின்ற நடப்பு அணுகுமுறை காரணமாக பேச்சுக்கள் முறியக் கூடிய சாத்தியம் இருப்பதாக ஹிண்ட்ராப் தனது ஆதரவாளர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது,” என்றும் ரமேஷ் அறிக்கை குறிப்பிட்டது.