போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சி சுகுமார் மீது இரண்டாவது சவப்பரிசோதனையை தாய்லாந்து உடற்கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ரோஜானாசுனாந்த் நடத்துவதை தடுப்பதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்டுள்ளதாக பிகேஆர் கூறிக்கொண்டுள்ளது.
“நஜிப், சுகுமார் இரண்டாவது சவப்பரிசோதனை தொடர்பில் தாய்லாந்துப் பிரதமர் யிங்லுக் ஷினாவாத்ரா-உடன் தொடர்பு கொண்டார்,” என அந்தக் கட்சியின் உதவித் தலைவர் என் சுரேந்திரன் இன்று பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.
“அந்தத் தொடர்பின் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலையக் கூடாது என்பதற்காக அந்த சவப்பரிசோதனையை பொர்ன்திப் நடத்தக் கூடாது என தாய்லாந்து அரசாங்கம் முடிவு செய்தது,” என அவர் கூறிக் கொண்டார்.
“நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து எங்களுக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அந்தத் தகவலின் உண்மை நிலை குறித்து நாங்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்றும் சுரேந்திரன் சொன்னார்.