பெர்சே 2.0, அதன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், மக்களிடையே விஷத்தையும் நம்பிக்கையின்மையையும் விதைத்து வருவதாக தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் அண்மையில் குற்றஞ்சாட்டியிருப்பது “தீய நோக்கம் கொண்ட, பொறுப்பற்ற” செயல் என்று வருணித்துள்ளது.
வான் அஹ்மட்டின் கூற்று சமூக அமைப்புகளும் மலேசிய மக்களும் கேள்வி எழுப்பும் விவகாரங்களிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகும் என பெர்சே கூறியது.
“பெர்சே 2010-இல் தொடங்கப்பட்டதிலிருந்து அது கட்சி-சார்பற்ற ஒரு சமூக அமைப்பாக, தூய்மையான, சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று போராடி வந்துள்ளது.
“2001 லிகாஸ் வழக்கு, 2012 மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வுத் திட்டம் (மெராப்), நடப்பு சாபா அரச விசாரணை ஆணைய (ஆர்சிஐ)த்தில் தெரிவிக்கப்பட்ட சாட்சியங்கள் ஆகியவை சீரமைப்புக்கான எங்களின் கோரிக்கை உண்மையை அடிப்படையாகக் கொண்டது என்பதற்குச் சான்றுகளாகும்.
“வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் இருப்பது பற்றியும் பரப்புரைகளின்போது வன்முறைகள் கடைப்பிடிக்கப்படுவது பற்றியும் அஞ்சல் வாக்களிப்பில் தெளிவின்மை பற்றியும் பொதுமக்கள் பெர்சே 2.0-இடம் புகார் செய்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் உள்ள நிலையையும் சாபாவில் அரசாங்க அதிகாரிகள் தாங்கள் “Ops Durian Buruk”நடவடிக்கைக்குக் உடந்தையாக இருந்தது பற்றி வழங்கிய வாக்குமூலங்களையும் பார்க்கையில் வாக்களிப்பில் மோசடி நிகழும் அபாயம் இருக்கவே செய்கிறது என பெர்சே கூறியது.
“இப்படிப்பட்ட நிலைமையில் தேர்தல் முறையை நம்புவதா இல்லையா என்பதை மக்களே தீர்மானித்துக்கொள்ள முடியும். அப்படி இருக்க நம்பிக்கையின்மை சித்தாந்தத்தைப் பரப்புகிறார்கள் என்று இசி எவரையும் குற்றம் சொல்ல இடமே இல்லை”.
இம்மாதத் தொடக்கத்தில், வான் அஹ்மட் 13வது பொதுத் தேர்தல் சுமூகமாக நடப்பதைக் கெடுக்க வேண்டாம் என்று அம்பிக்கைவைக் கேட்டுக்கொண்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அம்பிகாவின் அறிக்கைகள் குழப்பத்தை உண்டுபண்ணி மக்களின் நம்பிக்கையைக் குலைப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தாராம்.