‘வெற்றி பெற்ற 100 நாட்களில் ஹிண்டராப் பெருந்திட்டம் நடைமுறைக்கு வரும்’

anwarபக்காத்தான் ராக்யாட் கூட்டரசு அதிகாரத்தை ஏற்குமானால் இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்க்க ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு வெளியிட்டுள்ள ஐந்தாண்டு பெருந்திட்டம் 100 நாட்களுக்குள் அமலாக்கப்படும் என பக்காத்தான் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

“பக்காத்தான் புத்ராஜெயாவைக் கைப்பற்றிய 100 நாட்களுக்குள் நாங்கள் அந்தப் பெருந்திட்டத்தை விவாதித்து அமலாக்குவோம் என்றும் நான் சொல்கிறேன்.”

“நாங்கள் அந்தப் பெருந்திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளோம் என்பதே நான் சொல்வதின் அர்த்தம்,” என ஷா அலாமில் 2000-க்கும் அதிகமான இந்தியர்கள் கலந்து கொண்ட இரண்டு மணி நேர கேள்வி பதில் நிகழ்ச்சியில் அன்வார் தெரிவித்தார்.

anwar1ஹிண்டராப் பெருந்திட்டத்தின் மீது பக்காத்தான் தனது கைவிரல் ரேகையைப் பதிக்குமா என செம்பருத்தி செய்தி இணையத் தள ஆசிரியர் ஜீவி காத்தையா எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த எதிர்த்தரப்புத் தலைவர் அவ்வாறு கூறினார்.

அந்த நிகழ்வில் முக்கிய ஏற்பாட்டாளரான செம்பருத்தியுடன் தமிழ் நேசன், தினக் குரல், மக்கள் ஓசை, மலேசிய நண்பன் ஆகிய மற்ற நான்கு தமிழ் நாளேடுகளும் பங்கு கொண்டன.

அந்த பெருந்திட்டத்தை அங்கீகரிப்பதற்கு பக்காத்தான் எடுத்துக் கொண்டுள்ள “நீண்ட தாமதம்” வரும் தேர்தலில் அந்தக் கூட்டணிக்கான ஆதரவை ஹிண்ட்ராப் மீட்டுக் கொள்வதற்கு வழி வகுத்து விடும் என ஹிண்ட்ராப் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

ஹிண்ட்ராப் உணர்வு புக்கு ஜிங்காவில் உள்ளது

anwar22012ம் ஆண்டு நவம்பர் தொடக்கம் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் உட்பட இரு தரப்புக்களும் நடத்திய பேச்சுக்கள் உட்பட ஹிண்ட்ராப்புடன் பேச்சு நடத்த பக்காத்தான் தொடக்கத்தில் ஆர்வம் காட்டிய போதிலும்  ‘முன்னேற்றத்தைக் காட்டுவதற்கு எதுவுமில்லை’ என்றும் அது கூறியது.

என்றாலும் “அந்தப் பெருந்திட்டத்தில் பக்காத்தான் கையெழுத்திட வேண்டும் என ஹிண்ட்ராப்பும் மற்ற அரசு சாரா அமைப்புக்களும் வற்புறுத்தக் கூடாது என அன்வார் தெரிவித்தார்.

பக்காத்தான் கொள்கை ஆவணமான புக்கு ஜிங்காவில் ஹிண்டராப் பெருந்திட்டத்தின் உணர்வு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

“நாங்கள் உங்களுடைய பெருந்திட்டத்தை படித்தோம். ஆனால் நீங்கள் ஏன் எங்கள் புக்கு ஜிங்கா பெருந்திட்டத்தை படித்துப் பார்க்கக் கூடாது ?” என அன்வார் வினவினார்.

anwar3பிகேஆர் கட்சியில் உள்ள இந்தியத் தலைவர்கள் இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் சொன்னார்.

நாடற்ற இந்தியர் பிரச்னைகள், தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு போதுமான ஒதுக்கீடுகள் இல்லாதது, தடுப்புக் காவல் மரணங்கள் ஆகியவை அந்தப் பிரச்னைகளில் அடங்கும்.

“குகன் விவகாரத்தைப் பாருங்கள் ( 2009ம் ஆண்டு போலீஸ் காவலில் இருந்த போது அவர் மரணமடைந்தார்) நாங்கள் அந்த விஷயத்தை எழுப்பியிருக்கா விட்டால் அது தேசியப் பிரச்னையாகவே மாறியிருக்காது. குகன் வீட்டுக்கு செல்லும் போது என்னுடன் சேர்ந்து கொள்ளுமாறு பாஸ், டிஏபி தலைவர்களையும் கூட  நான் கேட்டுக் கொண்டேன்.”

அந்த நிகழ்வு இரவு 11.15 வாக்கில் நிறைவடைந்தது.

 

TAGS: