தேர்தல் தோல்வி பயம் பில்லியன் ரிங்கிட் பெறும் குத்தகைகளை வெளியிடுவதற்குக் காரணமா ?

najibபிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் பில்லியன் ரிங்கிட் திட்டங்களை அவசரம் அவசரமாக வழங்குவதற்கு வரும் தேர்தலில் தோல்வி காணக் கூடும் என்ற பயம் காரணமா என டிஏபி இன்று வினவியது.

தனியார் மயத் திட்டங்கள் வழங்கப்படும் வேகத்தைப் பார்க்கும் போது இரண்டு விஷயங்களை நினைக்கத் தூண்டுவதாக டிஏபி பிரச்சாரச் செயலாளர் டோனி புவா இன்று கூறினார்.

முதலாவதாக குத்தகைகள் கொடுக்கப்படும் வேகத்தைப் பார்த்தால் பிஎன் தனது அதிகாரத்தை இழக்கும் சாத்தியம் உண்மையாகவே நிலவுகின்றது

இரண்டாவதாக எல்லாத் தேர்தல்களைக் காட்டிலும் முக்கியமானது எனக் கருதப்படும் வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதற்கு தனது சேவகர்களிடமிருந்து பிஎன் நிதி திரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையைக் ((EKVE) கட்டும் குத்தகை நேரடிப் பேச்சுக்கள் மூலம் Ahmad Zaki Resources Bhd-க்கு (AZRB) கடந்த புதன் கிழமை வழங்கப்பட்டது அவற்றுள் ஒன்றாகும் என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யுமான புவா சொன்னார்.najib1

நேற்று புர்சா மலேசியா பங்குச் சந்தைக்கு சமர்பிக்கப்பட்ட ஒர் அறிக்கையில் அந்தக் குத்தகை Ahmad Zaki Resources-க்கு வழங்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று பல நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நிறுவனத்துக்கு முழுமையாக சொந்தமான EKVE Sdn Bhd நெடுஞ்சாலையின் வடிவமைப்பு கட்டுமானம், நிர்வாகம், பராமரிப்பு ஆகியவற்றுக்கு முழுப் பொறுப்பேற்கும். என்றாலும் அதற்கான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை.

“அந்த தனியார் மயத் திட்டத்தில் எளிய வட்டியில் Ahmad Zaki Resources-க்கு 635 மில்லியன் ரிங்கிட் கடன் வழங்குவதும் அடங்கும். அதே வேளையில் அதற்கு 50 ஆண்டு கால சலுகையும் கொடுக்கப்பட்டுள்ளது. அது மலேசிய வரலாற்றில் இரண்டாவது நீண்ட காலமாகும்.”

“அந்த நெடுஞ்சாலையைக் கட்டுவதற்கான செலவில் கிட்டத்தட்ட பாதியை அரசாங்கம் கொடுக்கும் வேளையில் ஏன் அந்தத் திட்டத்தைத் தனியார் மயமாக்க வேண்டும் என்பதே இப்போதைய கேள்வி ஆகும்.”

“சில நிறுவனங்கள் எதிர்காலத்தில் பல பில்லியன் ரிங்கிட் ஆதாயத்தைப் பெறுவதற்கு மக்களை நிச்சயம் உறிஞ்சப் போகின்றன,” என்றும் புவா குறிப்பிட்டார்.

நான்கு வாரங்களுக்கு முன்பு 5.2 பில்லியன் ரிங்கிட் பெறும் மேற்குக் கரை நெடுஞ்சாலைத் திட்டம் 60 ஆண்டு காலச் சலுகையுடன் Kumpulan Europlus-க்குக் கொடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கு அரசாங்கம் 2.24 பில்லியன் ரிங்கிட் குறைந்த வட்டியைக் கொண்ட கடனை வழங்குவதோடு நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு 980 மில்லியன் ரிங்கிட்டும் கொடுக்கிறது என்றும் புவா சொன்னார்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் 2.2 பில்லியன் ரிங்கிட் பெறும் கின்ராரா-டமன்சாரா துரித நெடுஞ்சாலைத் திட்டம் அம்னோ வழக்குரைஞர் ஹாபாரிஸாம் ஹருணுடனும் அண்மையில் ஒய்வு பெற்ற தேசியத் தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மியுடனும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஆகவே பக்காத்தான் கூட்டரசு அரசாங்கம் அமையும் சாத்தியம் நிறைய உள்ளது. என்றாலும் நாம் கறை படிந்த தேர்தல்களை நாம் முதலில் சமாளிக்க வேண்டும். ஏனெனில் தேர்தலில் வெற்றியை ‘வாங்குவதற்கு’ அது தான் திரட்டியுள்ள பெரும்பணத்தை பயன்படுத்துவது திண்ணம்,” என புவா மேலும் சொன்னார்.

 

TAGS: