ரஷ்யாவில் எரிகல் சிதறல் மழை; 950 பேர் காயம்

meteorரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள யூரல் மலைத்தொடரின் அருகே விண்ணிலிருந்து தீச்சுவாலையுடன் விழுந்த எரிகல் ஒன்றிலிருந்து பயங்கர வேகத்தில் வீசி எறியப்பட்ட சிதறல்கள் பல இடங்களில் விழுந்து வெடித்ததில் 950க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

ஆறு நகரங்களில் எரிகல் சிதறல்களால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் சார்பாக பேசவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஒரு ஒளிக் கீற்றாக எரிகல் காற்று மண்டலத்தில் சீறிச் செல்வதையும், அதன் வால் பகுதியில் பயங்கர வெளிச்சத்துடன் தீப்பிழம்பு வெடிப்பதையும் வீடியோ படங்கள் காட்டுகின்றன.

யூரல் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள செல்யாபின்ஸ்க் என்ற ஊரில் அலையலையாய் வந்த எரிகல் சிதறல் மழையால் ஏற்பட்ட அதிர்வலையில் கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்தன, கார்களின் அலாரங்கள் அலர ஆரம்பித்தன.

என்ன நடக்கின்றது என்று பார்ப்பதற்காக வெளியில் ஓடிவந்த மக்களின் உடல்களில் கண்ணாடித் துகள்கள் பாய்ந்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.

எல்லோரும் பரபரப்பாக தொலைபேசியில் ஒரே நேரத்தில் பேச முற்பட, அந்தப் பகுதியில் கைத்தொலைபேசி மின் அலைச் சேவை பளு தாளாமல் சற்று நேரத்துக்கு செயலிழந்து போனது.

இந்த எரிகல்லின் சில துண்டுகள் செர்பகுல் என்ற ஊர் அருகே இருக்கின்ற நீர்த்தேக்கத்தில் விழுந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.