“இக்கட்டான சூழ்நிலையில் ஹிண்ட்ராப்- தனியாகச் செல்வதா அல்லது ஒதுங்கி நிற்பதா ?”

weytha‘பெரும்பான்மை மலாய் வாக்காளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய எதிலும் பக்காத்தான் கையெழுத்திடாது என்பதை ஹிண்ட்ராப் புரிந்து கொள்ள வேண்டும்’

ஹிண்ட்ராப்-பக்காத்தான் விவாதங்களக் கசிய விட்டது தீய நோக்கம் கொண்டது

நியாயம்: ஹிண்டரப் தலைவர் பி வேதமூர்த்தி அவர்களே, தயவு செய்து மக்களை முட்டாளாக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள். பக்காத்தான் ராக்யாட்டுடன் நடத்தும் பேச்சுகளில் முன்னேற்றம் இல்லை என முதலில் சொன்னது நீங்கள் தான். ஆகவே அது பற்றிக் கூடுதல் தகவல்களைப் பெற நிருபர்கள் முயன்றதில் ஆச்சரியமில்லை.

இரண்டாவதாக நீங்கள் தொகுதிகளுக்கான கோரிக்கையை நீங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்பியது,  ஆறு அம்ச ஹிண்டராப் பெருந்திட்டத்தை பக்காத்தான் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே நீங்கள் கேட்பதாக மக்கள் எண்ண வேண்டும் என நீங்கள் எண்ணியிருந்தீர்கள். இப்போது உண்மை வெளிச்சத்துக்கு வந்ததும் அது தீய நோக்கம் எனச் சொல்கின்றீர்கள்.

தொகுதிகளுக்கான கோரிக்கை ஏன் ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும் ? பக்காத்தான் தான் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை என்னும் தோற்றத்தை அளிக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள்.

பார்வையாளன்: பெரும்பான்மை மலாய் வாக்காளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய எதிலும் பக்காத்தான் கையெழுத்திடாது என்பதை ஹிண்ட்ராப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கையெழுத்திட்டால் அம்னோ அதனைப் பயன்படுத்திக் கொண்டு திசை திருப்பி விடும்.

எடுத்துக்காட்டுக்கு ஹிண்ட்ராப்பின் சில கோரிக்கைகள், மலாய்க்காரர்கள் தங்கள் சிறப்புச் சலுகைகளில் சிலவற்றை இழக்க வழி வகுத்து விடும் என்று கூட அம்னோ திசை திருப்பி விடலாம். அத்தகைய கருத்துக்கள் பக்காத்தானுக்கான மலாய் ஆதரவைக் குறைத்து விடுவதோடு பக்காத்தான் வெற்றி பெறும் வாய்ப்புக்களையும் குறைத்து விடும்.

தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற முழு அளவில் உதவிய பின்னரே ஹிண்ட்ராப் தனது கோரிக்கைகளை விடுக்க வேண்டும். பிஎன் வென்றால் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை என்பதை அது உணர வேண்டும். அதே வேளையில் பக்காத்தான் வென்றால் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழக் கூடும்.

பக்காத்தான் வெற்றி பெற்று அது ஏமாற்றத்தை அளித்தால் ஹிண்ட்ராப் உரத்த குரலில் புகார் செய்யலாம். அப்போது பக்காத்தான் அடுத்த தேர்தலில் இந்தியர் வாக்குகள் கிடைக்காமல் போகக் கூடும் என்ற அச்சம் காரணமாக ஹிண்ட்ராப்புக்குச் செவி சாய்க்கக் கூடும்.

டெலிஸ்டாய்!: வேதா அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களை நீங்கள் கேட்பதே தீய நோக்கம்இல்லையா ? பெருந்திட்டத்தில் ஹிண்ட்ராப் நியாயமான கோரிக்கைகளை விடுக்கிறது. ஆனால் மறைவாக தொகுதிகளுக்குக் கோரிக்கை விடுக்கிறது. அதற்கு இணங்கா விட்டால் பக்காத்தானை புறக்கணிக்கப் போவதாக அது மறைமுகமாக மருட்டுகின்றது.

கண்ணாடி வீட்டுக்குள் வாழ்கின்றவர்கள் கற்களை எறியக் கூடாது.

ரஞ்சித் சிங்: பக்காத்தான் கூட்டணியில் பங்காளி என்ற முறையில் மஇகா வசமுள்ள எல்லா இடங்களையும்ஹிண்ட்ராப் துணிச்சலுடன் கேட்கின்றது. அது தனது பலத்தை அறிந்துள்ளது.

ஆனால் பக்காத்தான் தலைமைத்துவத்தை பற்றி அவ்வாறு சொல்ல முடியாது. நிச்சயம் அங்குள்ள ‘ஹீரோக்கள்’ பாதுகாப்பான தொகுதிகளையே நாடுவர். அத்தகைய இடங்களுக்கு அவர்கள் செல்வதை நீங்கள் பார்க்கலாம்.

13 கட்சிகளைக் கொண்ட பிஎன் சமரசம் செய்து கொள்ளும் போது ஹிண்ட்ராப்பையும் பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சியையும் பற்றிப் பரிசீலிக்கவே பக்காத்தான் தயங்குவது எனக்குப் புரியவே இல்லை.

பக்காத்தான் தனது சொந்த ‘மண்டோர்களை’ தேர்வு செய்து கொள்ளலாம். (நிச்சயம் அதில் ஹிண்ட்ராப் ஒன்று அல்ல). பக்காத்தான் இடங்களில் தான் நுழையப் போவதில்லை என ஹிண்ட்ராப் தெளிவுபடுத்தியுள்ளது.  மஇகா வைத்துள்ள இடங்களில் மட்டுமே அது நேரடியா மோத விரும்புகின்றது. ஆகவே இதில் என்ன பிரச்னை என்பது எனக்குப் புரியவே இல்லை.

ஒப்பா: பல்வேறு தரப்புக்களுடன் கலந்தாய்வு செய்த பின்னர் ஏழு நாடாளுமன்ற 10 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான எங்கள் யோசனை தெரிவிக்கப்பட்டதாக வேதமூர்த்தி சொல்கிறார்.

மஇகா-விடம் நான்கு நாடாளுமன்ற இடங்களும் ஏழு சட்டமன்ற இடங்களும் மட்டுமே உள்ளன. அந்த எண்ணிக்கை எப்படி திடீரென 17 ஆனது ?

கேஎஸ்டி: நான் இன அடிப்படை அல்லாத அரசியலில் நம்பிக்கை வைத்துள்ளவன். ஹிண்ட்ராப் தனதுநிலையை தொடர்ந்து வலியுறுத்துமானால் பல ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்து வரும் ஹிண்ட்ராப் அல்லாத இந்திய அரசியல்வாதிகளை என்ன செய்வது என்பது மீது அதனிடம் ஏதும் யோசனைகள் உள்ளதா ?

ஹிண்ட்ராப் அவர்கள் தொகுதிகளை விரும்புவதால் அவர்களை ஒய்வு பெறச் சொல்லி விடலாமா ?

அன்ஸ்பின்: மஇகா வசமுள்ள தொகுதிகளில் யார் போட்டியிடுவது என ஹிண்ட்ராப்புக்கும் பக்காத்தானுக்கும் இடையில் நிகழும் விவாதம் மிகவும் ஆணவமானது.

அவற்றில் போட்டியிட ஹிண்ட்ராப் அனுமதிக்கப்பட்டால் ஹிண்ட்ராப் வெற்றி பெறும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஏனெனில் மலாய் வாக்குகள் வலிமையில் மஇகா இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

TAGS: