டோங் ஜோங் எனப்படும் ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கலந்து கொண்டார்.
கடந்த 50 ஆண்டுகளில் டோங் ஜோங் உபசரிப்பு ஒன்றில் கலந்து கொள்ளும் முதலாவது பிரதமர் நஜிப் ஆவார்.
என்றாலும் அந்த வரலாற்றுச் சிறப்புடைய வருகையின் போது சீனக் கல்விக்கு கூடுதலான அங்கீகாரத்தை பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது நிறைவேறவில்லை.
அரசாங்கத்துடன் அண்மைய காலமாக டோங் ஜோங் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதும் பாரம்பரிய சிவப்பு நிற சீன உடையுடன் காஜாங்கில் நடைபெற்ற அந்த நிகழ்வுக்கு காலை மணி 9.45க்கு (திட்டமிடப்பட்டதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக) நஜிப் சென்றடைந்தார்.
சிங்க நடனத்துடன் வரவேற்கப்பட்ட நஜிப்பை டோங் ஜோங் தலைவர் யாப் சின் தியான், பிரதமர் துறை அமைச்சர் கோ சூ கூன், மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் ஆகியோர் எதிர்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த 5,000க்கும் மேற்பட்ட மக்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
சீனக் கல்வி போராட்ட அமைப்பான டோங் ஜோங் தனது சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு பிரதமரை அழைத்த பின்னர் நஜிப் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
டோங் ஜோங் விடுத்த அழைப்பில் அதனுடைய மூன்று நீண்ட காலக் கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
UEC என்ற ஐக்கிய தேர்வுச் சான்றிதழை அங்கீகரிப்பது, கூடுதலாக சீன சுயேச்சைப் பள்ளிகளை அமைக்க அனுமதிப்பது, தேசியக் கல்விப் பெருந்திட்டத்தை மறு ஆய்வு செய்வது ஆகியவை அந்தக் கோரிக்கைகளாகும்.
என்றாலும் பிரதமருடைய வருகையின் போது எதனையும் எதிர்பார்க்க வேண்டாம் எனப் பிரதமர் அலுலகம் கூறியிருந்தது. பிரதமர் அன்பளிப்புக்களுடன் வர மாட்டார் என நஜிப்பின் அரசியல் செயலாளர்களில் ஒருவரான வோங் நாய் சீ தெரிவித்திருந்தார்.
அந்த நிகழ்வில் பிரதமர் திடீரென எந்த அறிவிப்பையும் விடுப்பாரா என்பது தமக்கு நிச்சயமாகத் தெரியாது என்றும் வோங் குறிப்பிட்டிருந்தார்.