தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்காக போராடும் கூட்டமைப்பான பெர்சே, பரப்புரைக்கான காலம் ஒதுக்கப்படுவதற்குமுன்பே பரப்புரைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக தேர்தல் குற்றச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஜோகூர் பாருவில், ‘Undilah Barisan Nasional’(பிஎன்னுக்கு வாக்களியுங்கள்) என்ற சொற்களுடன் பிஎன் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருப்பதை அது சுட்டிக்காட்டியது.
கோலாலும்பூரில், பங்சார், தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் ஆகிய இடங்களிலும் அதே போன்ற கொடிகள் பறக்கக் காணப்பட்டன.
அக்கொடிகளில் பிஎன் அடையாளச் சின்னம் மட்டுமே இருந்திருந்தால் பிரச்னை இல்லை என்று பெர்சே இயக்கக் குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா கூறினார்.
ஆனால், ‘Undilah Barisan Nasional’என்பது அப்பட்டமான தேர்தல் பரப்புரையாகும். அதை ஏற்பதற்கில்லை என்றவர் விளக்கினார்.
“தேர்தல் எப்போது என்பது தெரியவில்லை. அதற்குள் அரசியல் கட்சிகள் பிரச்சார வேலைகளைத் தொடங்கி விட்டன”, என்றவர் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
“இன்னொன்று…பணம் கொடுப்பதாகச் சொல்வது. வரிசெலுத்துவோரின் பணம் வாக்குகள் வாங்கப் பயன்படுகிறது.அதுவும் வெளிப்படையாகச் செய்யப்படுகிறது”.
பெர்சே இயக்கக்குழுவைச் சேர்ந்த அருள் பிரகாஷும் சைட் இப்ராகிம் சைட் நோ-வும்(வலம்), எதிர்வரும் தேர்தலில் பிஎன் வென்றால் பந்துவான் ரக்யாட் 1மலேசியா உதவித் தொகை அதிகரிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் துணைப் பிரதமர் முகைதின் யாசினும் வாக்குறுதி அளித்திருப்பதைச் சுட்டிக்காட்டினர்.
எம்ஏசிசி-இன் கூற்று தவறான அர்த்தத்தைத் தருகிறது
கட்சிக்கு ஆதரவுதேடும் முயற்சியாக பணம் கொடுக்கப்படுவதற்கும் அன்பளிப்புகள் வழங்கப்படுவதற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை என்று மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) விடுத்துள்ள அறிக்கை குறித்தும் பெர்சே கேள்வி எழுப்பியது.
எம்ஏசிசி-இன் அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாகக் கூறிய மரியா சின், வாக்கை-வாங்குதல் தேர்தல் சட்டப்படி குற்றம்தான் என்றார்.
“பணம் கொடுப்பதால் தனியொரு வேட்பாளர் நன்மை அடைகிறார் என்றால் மட்டுமே அது குற்றமாகும் என்று தேர்தல் சட்டத்தின் பகுதி 8,9,10 ஆகியவை எந்த இடத்திலும் கூறவில்லை”, என்றாரவர்.
எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் (III) சுடினா சுடன், ஒரு கட்சி ஆதரவு தேடுவதற்காக பணத்தையோ பொருள்களையோ அன்பளிப்பாக வழங்குவது குற்றமில்லை, ஒரு வேட்பாளர் அப்படிச் செய்வதுதான் குற்றமாகும் என்று கடந்த வாரம் கூறியிருந்தார்.
குடிமக்கள் தேர்தல் கண்காணிப்பு இயக்கமான பெமாந்தாவில் சேர 2,000 தன்னார்வலர்கள் பதிவு செய்துகொண்டிருப்பதாகவும் மரியா சொன்னார். மேலும் பலர் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
“தூய்மையான, நியாயமான தேர்தல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்த மலேசியாவுக்கு அதன் குடிமக்களின் கண்களும் காதுகளும் முன் எப்போதையும்விட இப்போது அதிகம் தேவைப்படுகின்றன”, என்றாரவர்.