லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் மலாயாப் பல்கலைக்கழகக் கருத்தரங்கு ஒன்றில் நேற்று பேசவிருந்தது அரசாங்க நெருக்குதலைத் தொடர்ந்து ரத்துச் செய்யப்பட்ட பின்னர் அந்த நிகழ்வுக்குச் சென்ற அவருக்கு ஹீரோ வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஒருவராக அதில் கலந்து கொள்ளும் பொருட்டு நேற்று பிற்பகல் விரிவுரை மண்டபத்துக்குள் நுழைந்த நுருலை, அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டலுடன் ஆரவாரமாக வரவேற்றனர். பின்னர் நுருல் இஸ்ஸா முன் வரிசையில் அமர்ந்தார்.
அந்த பிற்பகல் நிகழ்வில் நுருல் இஸ்ஸாவும் பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசாவும் உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லாவுடனும் உலு சிலாங்கூர் எம்பி பி கமலநாதனுடனும் பேசுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
பிரதமர் அலுவலகம், உயர் கல்வி அமைச்சு ஆகியவை அழுத்தம் கொடுத்ததும் அது கல்வியாளர்கள் மட்டும் உரையாற்றும் நிகழ்வாக மாற்றப்பட்டது.
ஜனநாயகம், தேர்தல் ஆகியவற்றுக்கான மலாயாப் பல்கலைக்கழக மய்யம் அந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
பிற்பகல் நிகழ்வில் அந்த மய்யத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான ஷாருதின் படாருதின், தொக் கெர் போங் ஆகியோரும் மலாயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முகமட் அபு பாக்காரும் பேசினார்கள். அந்த மய்ய இயக்குநர் முகமட் ரெட்சுவான் ஒஸ்மான் அனுசரணையாளராக பணியாற்றினார்.
கேள்வி பதில் நேரத்தின் போது பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகள் வெவ்வேறான சித்தாந்தங்களைப் பின்பற்றுவதால் ஆட்சி செய்வதற்கு அதற்கு உள்ள ஆற்றல் குறித்து நுருல் இஸ்ஸா விளக்க வேண்டும் என கேள்வி நேரத்தின் போது மாணவர் ஒருவர் கேட்டுக் கொண்ட பின்னர் அவர் மேடைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
“நான் அவரை மேடையில் அனுமதிக்கா விட்டால் மாணவர்கள் ஆத்திரமடையக் கூடும்,” என ரெட்சுவான் சொன்னார். அவர் மலாயாப் பல்கலைக்கழக கலை, சமூக அரிவியல் பிரிவின் தலைவரும் ஆவார். பின்னர் அவர் நுருல் இஸ்ஸாவை மேடைக்கு அழைத்தார்.
எதிர்த்தரப்பு முதிர்ச்சி அடைந்துள்ளது
1969ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குபெரும்பான்மை கிடைக்காத போதும் பாஸ் கட்சியும் டிஏபி-யும் இணங்கிப் போக முடியவில்லை. ஆனால் 2008 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பக்காத்தான் ராக்யாட் கூட்டணி இணக்கத்தை ஏற்படுத்துவதில் கணிசமான அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
“எந்தக் கூட்டணிக்கும் அது அரசியல் நடைமுறையாகும். அது இயல்பாக வந்து விடாது. அரசமைப்பு மீதும் பொதுக் கொள்கை வடிவமைப்பு மீதும் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் இணக்கம் நிலவுவது தான் மிகவும் முக்கியமாகும்.”
“பக்காத்தான் ராக்யாட் கூட்டணி இப்போது தான் நான்காம் ஆண்டில் நுழைந்துள்ளது. மக்கள் அதனைப் பற்றி தீர்ப்புச் சொல்ல முடியும்,” என்றும் நுருல் இஸ்ஸா குறிப்பிட்டார்.
“பக்காத்தானில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கட்சியும் சம நிலையில் உள்ள பங்காளிகள். அதில் எந்தக் கட்சியும் ஆதிக்கம் செலுத்துவதில்லை.”