லஹாட் டத்துவில் ஊருருவியுள்ள ஆயுதமேந்திய நபர்களை வெளியேற்றுவதற்கு தாங்கள் உறுதியாகச் செயல்படவில்லை எனக் கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர்.
“நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்,” என அவர்கள் வலியுறுத்தினர்.
“நீங்கள் ஊகங்களை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் என நான் வலியுறுத்த விரும்புகிறேன். ஒவ்வொருவருடைய நன்மைக்காகவும் பல விஷயங்களைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது,” என அவர் தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் கூறினார்.
அந்த இழுபறிக்கு நல்ல முடிவு காண போலீஸ் விரும்புகின்றது. சட்டத்திற்கு இணங்க அந்த கும்பலை போலீஸ் வெளியேற்றும் என்றும் அவர் கோலாலம்பூரில் நிருபர்களிடம் சொன்னார்.
பிப்ரவரி 12ம் தேதி தொடங்கிய அந்த ஊடுருவல் பற்றி இதுவரை முழுமையான தகவல்கள் ஏதுமில்லை. விவரங்களைத் தருவதற்கு போலீஸும் உள்துறை அமைச்சும் மறுத்து வருகின்றன.
நிருபர்கள் மேலும் கேள்விகளை எழுப்புவதற்கு முன்னரே இஸ்மாயில் தமது நிருபர்கள் சந்திப்பை அவசரமாக முடித்துக் கொண்டார்.
ஐஜிபி: வதந்திகளை நம்ப வேண்டாம்
நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட அந்தக் கும்பல் தங்கியுள்ள கம்போங் தாண்டுவோ-வைச் சுற்றிலும் போலீஸ் நிறுத்தப்பட்டுள்ளதாக மட்டுமே இது வரை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கும்பல் சுலு சுல்தானைப் பிரதிநிதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கும்பல் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு அங்கு சென்றடைந்ததாக சபாவில் வெளியாகும் டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேடு கூறியது. அந்தக் கும்பல் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.
தாங்கள் அமைதிக்காக வந்திருப்பதாக உள்ளூர் மக்களுக்கு அந்தக் கும்பல் உறுதி அளித்துள்ளது. அந்தக் கும்பலில் ஐந்து பெண்களும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
அந்தக் கும்பல் கோரிக்கைகளை விடுத்துள்ளதாகவும் ஆனால் அவற்றின் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. அதனால் இணையத்தில் அதிகமான வதந்திகள் வலம் வரத் தொடங்கியுள்ளன.
அந்த இழுபறி தொடர்பில் சமூக ஊடக இணையத் தளங்களில் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என இஸ்மாயில் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
பொது மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் அவர் சொன்னார்.