போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கண்டித்தும், சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினை மலேசிய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி அண்மையில் கிள்ளானில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (காணொளி)
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மலேசியத் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த அமைதி ஊர்வலத்தில் சிறுவர்கள் தொடக்கம் பெரியோர் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாலை 6 மணியளவில் ஆரம்பமான இவ் ஊர்வலம் கிள்ளான் செட்டி திடலிருந்து ஜலான் துங்கு கிளானா வழியாக சென்று மாலை 7 மணி அளவில் மீண்டும் செட்டி திடலை வந்தடைந்தது.
இந்த அமைதி ஊர்வலத்தில் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார், சுவராம் தலைவரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மலேசிய தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் கா. ஆறுமுகம், சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைவர் சேகரன், அரசு சார பொது அமைப்புகளின் தலைவர்கள், கிள்ளான் நகராண்மை கழக உறுப்பினர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
2012-ம் ஆண்டு சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கான வாக்களிப்பில் மலேசியா பங்கெடுக்காமல் நடுநிலை வகித்தது.
எனினும், அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐ.நா மனித ஆணையக் கூட்டத் தொடரில் சிறிலங்கா விவகாரம் தொடர்பில் மற்றுமொரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரவுள்ளது. முன்மொழியப்படவுள்ள இந்த தீர்மானத்திற்கு மலேசியா அரசாங்கம் ஆதரவளித்து சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் என இந்த அமைதி ஊர்வலத்தின்போது கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் 2009-ஆம் ஆண்டு சிங்கள அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலைக்கு எதிரான ஆதரவினை மலேசியத் தமிழர்கள் வலுவாகவே காட்டிவருவதாக கூறிய வழக்கறிஞர் கா. ஆறுமுகம், இதற்கு முன்னர் இதே வட்டார மக்கள் ஒன்றுகூடி இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்ற வகையில் அவரது உருவ பொம்மை தூக்கிலடப்பட்டு எரியூட்டப்பட்டது என்றார்.
மேலும், சிறீலங்கா அரசின் இந்த தமிழ் இனப்படுகொலை; மொழி, இனம், பண்பாடு மற்றும் சமயம் ஆகியவற்றில் ஒன்றுபட்ட மலேசியத் தமிழர்களை வெகுவாகப் பாதித்துள்ளது. மலேசியத் தமிழர்கள் சிறீலங்கா அரசின் தமிழ் இனப்படுகொலையையும், தமிழர்களுக்கு எதிராக அந்த அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வரும் கொள்கைகளையும் மலேசியத் தமிழர்கள் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றனர். சிறீலங்கா சிங்கள அரசின், தமிழ் இன அழிப்பு கொள்கைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதுவே மலேசியத் தமிழர்களின் அடங்கா வேட்கை என வழக்கறிஞர் கா. ஆறுமுகம் குறிப்பிட்டார்.
உலக அரங்கில் சிறிலங்காவிற்கு எதிரான குரல் வலுத்து வரும் இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயற்பாடுகளை மலேசியாவில் தீவிரப்படுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு சிங்கள இராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்தாக ‘சனல் 4’ தொலைக்காட்சி புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள செய்தியால் உலகத் தமிழர்களிடையே கொந்தளிப்பு ஏற்ப்பட்டுள்ளது.