நீதிமன்றம் செல்லத் தேர்தல் ஆணையம் தயார் என்கிறார் அதன் தலைவர்

1ecதேர்தல் ஆணையம் (இசி), அதன் உதவிப் பதிவதிகாரிகள் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதில் செய்த தவற்றுக்காக பக்காத்தான் ரக்யாட் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் வழக்கைச் சந்திக்க ஆயத்தமாகவுள்ளது.

இதனை மலாய்மொழி நாளேடான சினார் ஹரியானிடம் தெரிவித்த இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், ஆணையம் சட்டத்தைப் பின்பற்றி வந்துள்ளது என்பதால் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்றார்.

“பெரும்பாலும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உதவிப் பதிவதிகாரிகள்தாம் அந்தத் தவற்றை (தப்பான வாக்காளர்களைப் பதிவுசெய்தல்) செய்திருப்பார்கள்.

1ec1“இசி, போராங் ஏ(வாக்காளர் பதிவுக்கான பாரம்) உள்பட  எல்லா ஆதாரங்களையும் வைத்துள்ளது. அவற்றை நீதிமன்றத்தில் காண்பிப்போம்”, என்று அசீஸ் கூறியதாக அந்நாளேடு குறிப்பிட்டுள்ளது.

வாக்காளர்களுக்குத் தெரியாமலேயே அவர்களைப் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யும் மோசடி வேலை நடந்துள்ளதாக பிகேஆர் உதவித் தலைவர் புஸியா சாலே (இடம்) கூறியிருப்பதற்கு அவர் இவ்வாறு மறுமொழி கூறினார்.

பிகேஆர் தகவல்களைச் சேகரித்து வருவதாகவும் இசி-க்கு எதிராக  வழக்கு தொடுப்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் புஸியா தெரிவித்திருந்தார்.

TAGS: