மாணவர்கள்: பின்வாங்க மாட்டோம், மீண்டும் பெக்கான் செல்வோம்

1studentபெக்கான் நகரில் காலிகளால் மிரட்டப்பட்டதாகக் கூறிக்கொள்ளும் கெராக்கான் மஹாசிஸ்வா பிஆர்யு13 (ஜிஎம்13), அதைக் கண்டு அஞ்சவில்லை என்று கூறியதுடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அந்தப் பாரம்பரிய நாடாளுமன்ற தொகுதியில் அவருக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்துவதிலும் உறுதியாகவுள்ளது.

1student1அந்த இயக்கத்தின் தலைவர் ஸைஸ் அப்துல் காடிர் (படத்தில் இடம் இருப்பவர்), தங்கள் முயற்சியினின்றும் பின்வாங்கப்போவதில்லை என்றும் பெக்கான் தொகுதிக்குத் திரும்பிச் செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார்.

“நாங்கள் மனம் கலங்கவில்லை… அவர்களுடன் தகராறு வேண்டாம் என்றுதுதான் திரும்பி வந்தோம். ஆனால், சரியான நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறோம்.  போலீசில் புகார் செயுதுள்ளோம். அவர்கள் விசாரிக்கட்டும்.

“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் அடுத்த கட்டமாக அங்கு திரும்பிச் செல்வோம். எங்கள் நிலைப்பாடு அதேதான். அதில் மாற்றமில்லை. வேட்புமனு தாக்கல் செய்யும் நாளில் எங்கள் வேட்பாளரை அறிவிப்போம்”.அவர், பெக்கானில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்கும் மகஜர் ஒன்றையும் தாங்கள் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் இன்று காலை போலீசில் ஒப்படைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர்களைத் தாக்கிய 16 பேரின் படங்களுடன் மகஜரையும்  ஸைஸ் போலிசில் ஒப்படைத்தபோது அவருடன் எட்டு மாணவர்களும் இருந்தனர்.

புக்கிட் அமான் நிறுவன தொடர்புப் பிரிவைச் சேர்ந்த ஏஎஸ்பி என். கவிதா மகஜரைப் பெற்றுக்கொண்டார்.

பல்கலைக்கழக மாணவர்கள் பெக்கான் குடியிருப்பாளர்களிடம் துண்டறிக்கைகள் விநியோகம் செய்துகொண்டிருந்தபோது அடையாள தெரியாத நபர்களால் அவர்கள் தாக்கப்பட்டதாகவும் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்நபர்களில் சிலர், மாணவியர் அணிந்திருந்த ‘தூடோங்’குகளைப் பிடித்து இழுத்ததாகவும் தெரிகிறது.

துண்டறிக்கைகளில் மாணவர்கள் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். அத்துடன் பிஎன்னின் செயல்பாட்டை மதிப்பிட வேண்டுமென வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

“புதிய அரசாங்கத்துக்கு வாய்ப்பு கொடுப்பதில் தப்பில்லை…..புதிய தலைமைத்துவம் மக்களின் எதிர்பார்புக்கு ஏற்ப செயல்படவில்லை என்றால், திரும்பவும் பிஎன்னைத் தேர்ந்தெடுக்கலாம்”, என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆதாரங்களைக் கொடுத்திருப்பதால் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஸைஸ் அதிகாரிகளைக்  கேட்டுக்கொண்டார்.

“பல்கலைக்கழக மாணவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட வன்செயல்கள் குறித்து போலீஸ் விசாரிக்க வேண்டும். அங்குள்ள மக்களால் எங்களுக்குப் பிரச்னை இல்லை. பெக்கான் நகரில் பிரச்னை ஏற்பட்டது. எங்களுக்குத் தொல்லை தந்தவர்களில் சிலர் பெக்கான் அம்னோ தலைமையகத்திலிருந்து வெளியில் வந்ததைக் கண்டோம்”, என்றவர் கூறினார்.

TAGS: