எஸ்எம்இ-கள், குறைந்தபட்ச சம்பள அமலாக்கத்தை ஓர் ஆண்டு தள்ளிவைக்கலாம்

mtucவெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ள சிறிய நடுத்தரத் தொழில்கள் (எஸ்எம்இ-கள்), குறைந்தபட்ச சம்பளத்தை நடைமுறைப்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கினால் அதை ஓராண்டுக்குத் தள்ளிவைக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம்.

இச்செய்தியை சின் சியு டெய்லியும் நன்யாங் சியாங் பாவும் பல வட்டாரங்களை மேற்கோள் காட்டி முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளன.

அமைச்சர் ஒருவர் அதை உறுதிப்படுத்தியதாகவும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான முடிவு செய்யப்பட்டதாகவும் நன்யாங் சியாங் பாவ் கூறியது.

குறைந்தபட்ச சம்பளத் திட்டம் ஜனவரியில் அமல்படுத்தப்பட்டதிலிருந்து எஸ்எம்இ-கள் அதற்கு கடும் எதிர்ப்புக் காட்டுவதால் அதை முழுமையாக செயல்படுத்த முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது.

குறைந்தபட்ச சம்பளம் பெறும் அந்நிய தொழிலாளர்கள் (குறைந்தபட்ச சம்பளம் தீவகற்ப மலேசியாவில் ரிம900, சாபா, சரவாக்கில் ரிம800) லெவி கட்டணத்தை அவர்களே கொடுக்க வேண்டும் என்று அமைச்சரவை ஜனவரி 30-இல் முடிவு செய்தது. அதற்குமுன் அவர்களை வேலை வைத்திருப்போரே அதைக் கொடுத்து வந்தனர்.

நேற்று, தேசிய சம்பள ஆலோசனை மன்றம்-சம்பளம் தொடர்பில் அரசாங்கத்துக்கு ஆலோசனைகூறும் குழு- தங்கள் ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளம் வழங்க முடியாத சிறிய, நடுத்தரத் தொழில்கள் குறைந்தபட்ச அமலாக்க ஆணையைத் தள்ளிவைக்க அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்யலாம் என்று கூறியது.

அவ்வாறு விண்ணப்பம் செய்வோர் அவர்களின் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து லெவி கட்டணம், வீட்டு வாடகை முதலியவற்றைக் கழித்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தள்ளிவைக்க அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்யாதவர்கள் இவ்வாண்டு ஜனவரியிலிருந்து குறைந்தபட்ச சம்பளத்தைக் கொடுத்தாக வேண்டும்.

ஆனால்,தோட்டத்துறையில் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ள நிறுவனங்கள் தொழிலாளர் சம்பளத்திலிருந்து வீட்டு வாடகையைக் கழித்துக்கொள்ள முடியாது என்று அதன் அறிக்கை கூறிற்று.

TAGS: