முதலமைச்சர்: நஜிப் கையெழுத்திட்ட நேர்மை வாக்குறுதி ‘வெறுமையானது’

BNபிஎன் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள நேர்மை வாக்குறுதி “ஏதுமில்லாத வெற்று அறிவிப்பு” என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வருணித்துள்ளார்.

தேர்தல் வாக்காளர் பட்டியல் தூய்மையானதாக இருக்கும் என்பதற்கும் சொத்துக்கள் முழுமையாக பகிரங்கமாக அறிவிக்கப்படும் என்பதற்கும் தெளிவான கடப்பாட்டை அந்த வாக்குறுதி வழங்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

“நஜிப்பும் மற்ற பிஎன் தலைவர்களும் தங்கள் நேர்மையை நிரூபிக்க வேண்டுமானால் முதலமைச்சர் உட்பட பினாங்கு மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் செய்ததைப் போல தங்கள் சொத்துக்களை முழுமையாக அறிவித்ததைப் போலச் செய்ய வேண்டும்,” என்றார் அவர்.

சொத்துக்களைப் பகிரங்கமாக அறிவிப்பதற்கு ஒப்புக் கொள்வதை தவிர்க்கும் பொருட்டு அத்தகைய நடவடிக்கை தங்களுடைய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கோத்தா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டாஹ்லான் போன்ற பிஎன் தலைவர்கள் சொல்லும் காரணம் பொருத்தமானதாகத் தெரியவில்லை என்றும் லிம் சொன்னார்.

“பிஎன் தலைவர்கள் கௌரவமானவர்களாகவும் வெளிப்படையாகவும் இருந்தால் அவர்களிடம் மறைப்பதற்கு எதுவும் இருக்கக் கூடாது,” என அந்த டிஏபி தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

“அவர்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை என்றால் ஏன் தங்கள் சொத்துக்களை பகிரங்கமாக அறிவிக்க அஞ்சுகின்றனர் ?”

“அந்தச் சாதாரண நடவடிக்கையைக் கூட அவர்களால் மேற்கொள்ள முடியாத போது நேர்மை வாக்குறுதியில் கையெழுத்திடுவதால் ஒரு பயனும் இல்லை,” என லிம் வலியுறுத்தினார்.

மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பின் தேர்தல் நேர்மை வாக்குறுதியில் நஜிப்பும் இதர பிஎன் தலைவர்களும் நேற்று கையெழுத்திட்டது குறித்து லிம் கருத்துரைத்தார்.

எதிர்வரும் தேர்தல் நியாயமாக இருப்பதை உறுதி செய்வதில் ஆளும் கூட்டணி தீவிரமாக உள்ளது என்பதைக் காட்டுவதற்காக தேர்தல் நேர்மை வாக்குறுதியில் கையெழுத்திடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: