‘திடீர் குடி மக்களில்’ கீழறுப்பு சக்திகளும் இருக்கலாம் என ஆர்சிஐ-யிடம் தெரிவிக்கப்பட்டது

citizensசட்ட விரோதமாக நீல நிற அடையாளக் கார்டுகளைப் பெற்ற அந்நியர்களில் கீழறுப்புச் சக்திகளும் இருக்கக் கூடும் என்றும் அதனால் அடையாளக் கார்டு திட்டம் (Project IC) தேசியைப் பாதுகாப்புக்கு மருட்டலானது என போலீஸ் சிறப்புப் பிரிவு இன்று கூறியது.

“அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்கள் பின்னணி என்ன என்பது நமக்குத் தெரியாது. அவர்கள் கிரிமினல்களாக அல்லது கீழறுப்புச் சக்திகளாக அல்லது அவை போன்ற தன்மைகளைக் கொண்டவர்களாக இருக்கலாம்.”

“அப்போது அது பாதுகாப்புக்கு மட்டும் மருட்டலாக மாறாது. நாட்டின் அரசியல், பொருளாதார சமூக நிலைத்தன்மைக்கும் மிரட்டலை ஏற்படுத்தும்,” என மதிப்பீட்டு அதிகாரியான அகமட் பாவ்சான் சபா கள்ளக் குடியேறிகள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்திடம் கூறினார்.

அகமட் தற்போது கோலாலம்பூர் சிறப்பு போலீஸ் பிரிவில் பாதுகாப்பு, மனிதக் கடத்தல் தடுப்பு அலுவலகத்தில் பணியாற்றுகின்றார்.

அந்த அடையாளக் கார்டு திட்டத்தை முறியடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது வேவுத் தகவல்களை மதிப்பீடு செய்யும் பொறுப்பு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக அவர் சொன்னார்.

1995ம் ஆண்டு தொடக்கம் ஆறு ஆண்டுகளுக்கு நீடித்த அந்த புலனாய்வில் வேவுத் தகவல்களுக்குத் தாம் பொறுப்பேற்றிருந்த போது மனிதர்களை கடத்தும் நடவடிக்கையிலும் கும்பல்கள் ஈடுபட்டதை தாம் அறிந்ததாக அகமட் மேலும் குறிப்பிட்டார்.

புலனாய்வின் விளைவாக அந்தக் கும்பல்களில் சம்பந்தப்பட்ட 94 பேர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1995க்கும் 2001க்கும் இடையில் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

அவர்களில் 80 பேருக்கு அந்தச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் தடுப்புக் காவல் தண்டனை வாங்கப்பட்டது. அறுவர் வசிப்பிடக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டனர். எண்மர் எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட்டனர்.

அவர்களைத் தடுத்து வைப்பதற்கான ஆணையில் அப்போதைய உள்துறை துணை அமைச்சர் மெகாட் ஜுனிட் மெகாட் அயூப் கையெழுத்திட்டதாகவும் அகமட் தெரிவித்தார்.

இசா சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அந்த தனிநபர்களில் யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை என்னும் கேள்விக்குப் பதில் அளித்த அவர், எல்லாச் சம்பவங்களிலும் அது தான் வழக்கமான நடைமுறை என்றார்.

என்றாலும் அந்த அடையாளக் கார்டு மேசடி மூலம் நன்மையடைந்த 3035 பேர்கள் மீது அந்த ஆவணங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக அவர் சொன்னார்.

பண ஆதாயமே அந்தக் கும்பல்களின் நோக்கமாக இருந்தது என்றும் அவை 11 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் திரட்டியிருக்கலாம் என்றும் திரட்டப்பட்ட வேவுத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது என அகமட் ஆர்சிஐ-யிடம் கூறினார்.

“ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் (அந்நியர்) 50 ரிங்கிட் முதல் 1,400 ரிங்கிட் வரை வசூலிக்கப்பட்டது. அவர்களில் முகவர்கள், துணை முகவர்கள், தேசியப் பதிவுத் துறை அதிகாரிகள் ஆகியோரும் அடங்குவர்,” என்றார் அவர்.

 

TAGS: