ஜனநாயக நாடுகள் 13வது பொதுத் தேர்தலைக் கண்காணிக்க வேண்டும்

dennisஎந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என மலேசியர்கள் எதிர்பார்க்கின்றனர். 55 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கட்சி ஆட்சி புரிந்த பின்னர் மலேசியர்கள் தங்கள் நாட்டின் நிலை குறித்து மலேசியர்கள் இப்போது அதிகமாக கவலைப்படத் தொடங்கியுள்ளனர்.

பெருகி விட்ட ஊழலும் அப்பட்டமான அதிகார அத்துமீறலும் நாட்டுக்கு சொல்ல முடியாத அளவுக்கு இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. நமது ஜனநாயக அமைப்புக்களான- நாடாளுமன்றம், நீதித் துறை, அரசாங்கச் சேவை, ஊடகங்கள் ஆகியவை நிர்வாக ஆதிக்கத்தினால் செயலிழந்து விட்டன.

மனித உரிமைகளுக்கு மரியாதையே இல்லை; ஊழல் காரணமான பில்லியன் கணக்கான ரிங்கிட் இழக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மை, ஊழல், ஊடகச் சுதந்திரம், நல்ல ஆளுமை ஆகியவற்றுக்கான குறியீடுகளில் நாட்டின் மதிப்பீடு தொடர்ந்து சரிவு காண்கிறது. 2008/2009ல் மட்டும் 300,000 மலேசியர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து விட்டனர்.dennis1

பொதுத் துறையை தாராளமாக்குவதாக அரசாங்கம் சொல்லிக் கொண்டாலும் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அரசியல் சீர்திருத்தங்கள் வெறும் சட்ட வார்த்தைகளை மட்டுமே மாற்றியுள்ளன.

ஒடுக்குமுறைகளும் கட்டுப்பாடுகளும் மாறவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அந்தச் சீர்திருத்தங்கள் ஏமாற்று வேலை என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. மாற்றங்கள் ஏதும் ஏற்படாவிட்டால் மலேசியா தோல்வி கண்ட நாடாக மாறுவது திண்ணம்.

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு எல்லா நிலைகளையும் சார்ந்த மலேசியர்கள் ஒன்று திரண்டு தாங்கள் மாற்றத்தை நாடுவதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் ஒன்று கூடி நியாயமான தூய்மையான தேர்தல்கள் வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இரசாயனம் கலக்கப்பட்ட நீரும் பாய்ச்சப்பட்டது.

குடிமக்கள் நடத்திய மற்ற போராட்டங்களுக்கும் இது வரை இல்லாத அளவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. ஜனநாயகத்திற்கான போராட்டம் தீவிரமடைவது ஊக்கமளிக்கிறது.

அச்சமும் நம்பிக்கையும்

13வது பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் அச்சமும் கூடியுள்ளது, நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. வாக்குப் பெட்டிகள் வழியாக அமைதியாகவும் ஜனநாயக ரீதியிலும் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.

dennis2அதே வேளையில் தேர்தல் மோசடி அல்லது இதர வழிகளில் மக்களுடைய விருப்பம் முறியடிக்கப்பட்டு விடும் என்ற அச்சமும் நிலவுகின்றது.

கடந்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக வாக்குகள் திசை மாறும் என அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. அதனால் அது தயாராக இல்லை. முக்கியமான மாநிலங்களையும் அது அப்போது இழந்தது.

ஆனால் இந்த முறை அது எந்த இடரையும் எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்பதை அதன் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

ஒரே முகவரியைக் கொண்டு பதிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் நாடு முழுவதும் முளைத்துள்ளனர். அந்நியத் தொழிலாளர்கள் சட்ட விரோதமாக வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என ஆய்வு செய்யப்பட்ட மலேசியர்களில் 92 விழுக்காட்டினர் விரும்புகின்றனர். தேர்தல் ஆணையம் (இசி) மீது வாக்காளர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே அது உணர்த்துகின்றது.

dennis3உண்மையில் வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளன. அதனால் நியாயமான தூய்மையான தேர்தல்களை நடத்துவது முடியாத காரியம் எனச் சிலர் எண்ணுகின்றனர்.

ஆனால் இசி அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்கிறது. வெளிப்ப்படையான ஆய்வை மேற்கொள்ள மறுக்கிறது.

அத்துடன் நாட்டில் தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் மீது அரசாங்கம் கிட்டத்தட்ட முழுக் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது. ஆகவே மலேசியாவில் தேர்தல் களம் சமநிலையற்றது என்பது தெளிவாகும்.

தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறு மலேசியர்களையும் எதிர்க்கட்சிகளையும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டால் அந்த வேண்டுகோளை நியாயமானதாக கருதலாம்.

ஆனால் எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் தமது கட்சி முடிவுகளை ஏற்றுக் கொண்டுஅதிகாரத்தை அமைதியாக ஒப்படைக்கும் என அவர் வாக்குறுதி கொடுக்கவில்லை

மற்ற ஜனநாயக நாடுகள் உதவ முடியும்

மலேசியாவுடன் நட்புறவு கொண்டுள்ள மற்ற நாடுகளுக்கு குறிப்பாக ஜனநாயக நாடுகளுக்கு இந்த நாட்டு நிலைமை நிச்சயம் நன்கு தெரியும். இங்குள்ள நிலையை கோலாலம்பூரில் உள்ள அவற்றின் தூதர்கள் அந்த அரசுகளுக்கு விளக்கியிருக்க வேண்டும்.

ஆனால் பல ஜனநாயக நாடுகள் வியூக, வர்த்தக நலன்களை தாங்கள் பின்பற்றும் ஜனநாயகம், சுதந்திரம் ஆகிய கோட்பாடுகளுக்கு மேலாகக் கருதுகின்றன.

மலேசிய வரலாற்றில் முக்கியமான இந்த கால கட்டத்தில் மற்ற ஜனநாயக நாடுகள் என்ன செய்யப் போகின்றன என்பது தான் இப்போதைய கேள்வி ஆகும். அவை ஒதுங்கியிருக்குமா அல்லது ஜனநாயகத்திற்கு ஆதரவு கொடுக்குமா ?

அவை வீரர்களை அனுப்ப வேண்டும் என்றோ, தடைகளை விதிக்க வேண்டும் என்றோ, ஆட்சி மாற்றத்துக்குச் சதித் திட்டம் தீட்ட வேண்டும் என்றோ யாரும் யோசனை கூறவில்லை. மலேசியாவில் ஜனநாயகத்துக்கானபோராட்டம் நம்முடையது, நாம் தான் அதனைச் செய்ய வேண்டும். மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான நமது உறுதி, நம்பிக்கை ஆகியவையே அந்தப் போராட்டத்தில் நமது வெற்றியையும் தோல்வியையும் உறுதி செய்யும்.

என்றாலும் மற்ற ஜனநாயக நாடுகள் நமக்குச் சட்டப்பூர்வமாக உதவுவதற்கு பல வழிகள் உள்ளன.  அனைத்துலக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயகத் தரத்தில் தேர்தலை நடத்துமாறும் நமது அரசமைப்புக்கு இணங்க வெளிப்படையாக தேர்தலை நடத்துமாறும் மலேசிய அரசாங்கத்தை அவை வற்புறுத்தலாம்.

தேர்தல் நடைமுறைகளை அவை கண்காணித்து அவை மோசடி எனத் தெரிந்தால் அங்கீகாரம் வழங்க மறுக்கலாம்.  மற்ற நாடுகளும் ஜனநாயகத்தைப் பின்பற்றுவதை அவை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்துலக தேர்தல் பார்வையாளர்கள் தேவை

அரசாங்கம் விரும்பும் நாடுகளிலிருந்து மட்டுமின்றி உண்மையான தேர்தல் கண்காணிப்பாளர்களை மலேசியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஜனநாயக நாடுகள் வலியுறுத்தலாம். பல நாடுகளுக்கு மலேசியா தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பியுள்ளது. அதனால் அந்த நாடுகளைச் சார்ந்தவர்களையும் வரவேற்க அது தயாராக இருக்க வேண்டும்.dennis4

உண்மையில் அனைத்து ஜனநாயக நாடுகளின் குறிப்பாக காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலின் போது தாங்கள் அழைக்கப்பட்டாலும் அழைக்கப்படா விட்டாலும் மலேசியாவுக்கு ஏதாவது ஒரு தகுதியில் இந்த நாட்டுக்கு வர வேண்டும். ‘பாதுகாப்புக்கு ஆபத்து’ எனக் காரணம் காட்டிஅண்மையில் ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் திருப்பி அனுப்பப்பட்டது போன்ற சூழ்நிலைஅவர்களுக்கு ஏற்படலாம். ஆனால் மலேசிய நிலவரம் குறித்து மற்ற நாடுகள் கவனம் செலுத்துவதற்கு அது ஒரு வகையில் உதவும்.

மேற்கத்திய ஜனநாயகங்களுக்கு அதிக வலிமை உள்ளது. தற்காப்பு குத்தகைகளையும் வியூக நன்மைகளையும்  பெற அவை அதனைப் பயன்படுத்தியுள்ளன. அந்த வலிமையை அவை நியாயமான சுதந்திரமான தேர்தல்களுக்குப் பயன்படுத்தலாம்.

உலகின் பல பகுதிகளில் தீவிரவாத, மேற்கத்திய எதிர்ப்பு ஆட்சிகள் உருவாகியிருப்பது மாற்றம் குறித்து ஜனநாயக நாடுகள் அச்சமடைவதற்கு வழி வகுத்திருக்கக் கூடும். தெரியாத பிசாசை விட தெரிந்த பேய் நல்லது என்று கூட வாதாடலாம். மலேசியாவில் மாற்றத்தை விரும்பாதவர்கள் அதனைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் மலேசிய நிலவரம் முற்றிலும் மாறுபட்டது. ஆளும் கட்சிக்கு மாற்றாகத் திகழக் கூடிய ஐக்கியமான,  நம்பத்தகுந்த, சாத்தியமான ஜனநாயக அமைப்பு இயங்குகிறது. எந்த ஜனநாயகமும் முறையாக இயங்குவதற்குத் தேவைப்படும் இரு கட்சி முறை நாட்டில் உருவாகியுள்ளது. அது ஆர்வத்தைத் தூண்டும் நல்ல அரசியல் மாற்றமாகும். அது மலேசியாவின் எதிர்காலத்தின் மீது நீண்ட கால, சாதகமான தாக்கத்தைக் கொண்டிருக்கும்.

மாற்றம் குழப்பத்தையும் உறுதியற்ற சூழ்நிலயையும் கொண்டு வரும் எனச் சொல்வது தவறாகும். மாறாக அது உண்மையான நிலைத்தன்மையையும் வளப்பத்தையும் அதிகமான சுதந்திரத்தையும் கொண்டு வரும்.

சுதந்திரமான உண்மையான ஜனநாயக மலேசியா மற்ற வளரும் நாடுகளுக்கு தூண்டுகோலாகத் திகழ முடியும்.உலகிற்கு இப்போது பெரிதும் தேவைப்படுகின்ற ஜனநாயக மாற்றத்துக்கு மலேசியா எடுத்துக்காட்டாகத் திகழமுடியும். ஆகவே மலேசியா தேர்தல்களுக்கு தயாராகும் வேளையில் அதனைக் கண்காணிப்பது ஜனநாயக நாடுகளின் கடமையாகும்.

—————————————————————————————————————————————————-

தூதரான டென்னிஸ் இக்னேஷியஸ், லண்டன், பெய்ஜிங், சண்டியாகோ, போனர்ஸ் அர்ஸ் ஆகியவற்றில் பணியாற்றியுள்ள முன்னாள் அரசதந்திரச் சேவை அதிகாரி ஆவார். அவர் கடைசியாக கனடாவுக்கான தூதராக பணியாற்றினார்

 

TAGS: