‘உடனடி குடிமக்கள்’வாக்களிக்கக்கூடாது :பாஸ் எச்சரிக்கை

ஆளும் கட்சியால் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டு “உடனடிக் குடிமக்கள்” ஆக்கப்பட்டவர்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கக்கூடாது என்று பாஸ் தேர்தல் இயக்குனர் டாக்டர் முகம்மட் ஹட்டா ரம்லி எச்சரித்துள்ளார்.

pas1 hattaஅப்படிப்பட்டவர்களை அடையாளம் காண பாஸ், அசல் புக்கான் அம்னோ என்னும் என்ஜிஓ-வுடன் சேர்ந்து  முயன்று வருவதாகக் கூறிய ஹட்டா(வலம்), பிஎன் அரசை ஆதரிக்க வேண்டும் என்பதற்காகவே குடியுரிமை கொடுக்கப்பட்டிருக்கும் அவர்களை வாக்களிக்கக் கூடாது என்று “மிரட்டுவோம்” என்றாரவர்.

“உண்மையான மலேசியர்கள் மட்டுமே வாக்களிப்பதை உறுதிப்படுத்துவோம்”, என்று ஷா ஆலம் பக்காத்தான் ரக்யாட் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

பக்காத்தானின் தேர்தல் ஆயத்தம் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் பாஸ் ஈராண்டுகளுக்குமுன்பே தேர்தலுக்குத் தயாராகி விட்டது என்றும் அவர் சொன்னார்.

“இட ஒதுக்கீட்டை முடிவுசெய்யும் இறுதிக் கட்டத்தில் உள்ளோம். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே இட ஒதுக்கீட்டுக்குத் தீர்வு காணப்படும்”.

இதன்வழி தேர்தல் வரும்போது 700 நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளிலும் பிஎன்னுக்கு எதிராக நேரடிப் போட்டி இருப்பது உறுதிப்படுத்தப்படும் என்றார்.

மலேசியாவில் நாடாளுமன்றத் தொகுதிகள் 222. எஞ்சியவை சட்டமன்றத் தொகுதிகள்.

pas azminமுன்னதாக பேசிய பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, பக்காத்தான் தேர்தலுக்கு ஆயத்தமாக இருப்பதுடன் புத்ரா ஜெயாவில் அமர்ந்து ஆட்சி செய்வதற்கும் ஆயத்தமாகி விட்டது என்றார்.

மாற்றரசுக் கட்சி உண்மையிலேயே முற்போக்கான ஒன்றை மக்களுக்கு வழங்கும் என்று அஸ்மின் குறிப்பிட்டார்.

“பொருளாதாரத்தைச் சீர்படுத்துவோம்.  அது இன அடிப்படையில் அல்லாமல் (மக்களின்) தேவையின் அடிப்படையில் செய்யப்படும்.

“அம்னோ, பெர்காசா, ஜடி(முன்னாள் பாஸ் தலைவர் ஹசன் அலியால் வழிநடத்தப்படும் என்ஜிஓ) ஆகியவற்றின் இனவாதத் திட்டங்களை ஒழிப்போம். வருங்கள், ஒன்று சேர்ந்து அவர்களின் இனவாதத் திட்டங்களைக் களை எடுப்போம்.

“எங்களிடம் மாற்றுத் திட்டம் உண்டு. குறிப்பாக, தூய்மையான, நம்பகமான தலைமைத்துவம் உண்டு. அதுவே பக்காத்தானின் மிக முக்கியமான சொத்து. எங்களிடம் பாஸ் ஆன்மிக தலைவர் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட் இருக்கிறார், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் இருக்கிறார்,  லிம் கிட் சியாங் இருக்கிறார், அன்வார் இப்ராகிம் இருக்கிறார்.

“தேர்தலுக்கு மட்டுமல்ல, புத்ரா ஜெயாவை வெல்வதற்கும் ஆயத்தமாக இருக்கிறோம். வாரீர், மலேசியாவை மேன்மைபடுத்த புத்ரா ஜெயாவை நோக்கிச் செல்வோம்”, என்று அஸ்மின் கூறினார்.

டிஏபி துணைத் தலைவர் டான் கொக் வாய், 13வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள  பக்காத்தான் தயாராக இருப்பதாய்க் கூறினார்.

“பிஎன் என்றென்றும் ஆட்சியில் இருக்கலாம் என்று நினைக்கிறது.ஆனால், பிஎன்னை முறியடிக்க நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். அது மட்டுமல்ல. மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றிபெறவும் போகிறோம்”, என டான் குறிப்பிட்டார்.

“பக்காத்தான் ரக்யாட்டின் வேட்பாளர் யாராக இருந்தாலும்  அவர் பங்காளிக் கட்சிகளின் முழு ஆதரவைப் பெறுவார் என்பதற்கு உறுதி கூறுகிறோம்”, என்றாரவர்.

 

TAGS: