ஓர் எலும்புக் கூடு பொதுத் தேர்தலுக்குக் காத்திருக்கும் படம் பிரதமரை சிரிப்பில் ஆழ்த்தியது

sekeletonபிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக காத்திருக்கும் ஒரு மனிதர் எலும்புக்கூடாக மாறும் படம் ஒன்று இணையத்தில் வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

நெகிரி செம்பிலானில் பிஎன் அடித்தட்டு உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது  ஒரே மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் (PR1MA) தலைவர் ஜமாலுதின் ஜார்ஜிஸ் தம்மிடம் காட்டிய போது அந்தப் படம் வேடிக்கையாக இருக்கிறது என நஜிப் கூறினார்.

தமது கைத் தொலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அந்தப் படத்தை நஜிப், நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகமட் ஹசான், தேவான் நெகாரா தலைவர் அபு ஸாஹார் நிக்க உஜாங், தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார் என சின் சியூ நாளேடு கூறியது.

எலும்புக்கூடு ஒன்று நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கும் அந்தப் படத்துக்கு “tunggu Najib bubar parlimen…” (நஜிப் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்) என விளக்கம் தரப்பட்டிருந்ததைக் கண்டு அனைவரும் சிரித்து விட்டனர்.

தாம் உட்பட பொது மக்கள் அனைவரும் பொதுத் தேர்தலுக்குக் காத்திருந்து களைத்துப் போய் விட்டதாக அந்த சிரம்பான் PR1MA நிகழ்வில் உரையாற்றிய முகமட் ஹசானும் நஜிப்பிடம் ‘புகார்’ செய்தார் என்றும் சின் சியூ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

“இது காற்பந்து போட்டியாக இருந்தால் இப்போது கூடுதல் நேரமாகும். என்றாலும் நாம் வெற்றி பெறும் வரையில் காத்திருப்போம்,” என முகமட் சொன்னதாக அந்த ஏடு தெரிவித்தது.

அதற்குப் பதில் அளித்த நஜிப், 13வது பொதுத் தேர்தலை தாம் நடத்துவதற்கு முன்னர் உருமாற்றத் திட்டங்கள் வழி மக்கள் உண்மையில் வெற்றி கண்டுள்ளதை நிரூபிக்க அரசாங்கம் விரும்ப்புவதாகச் சொன்னார்.

TAGS: