வழக்குரைஞர் மன்றம் பிகேஆர் தலைவர் ஒருவரை அழைத்துள்ளதை ஒரு வழக்குரைஞர் ஆட்சேபிக்கிறார்

Barவழக்குரைஞர் மன்றம் நாளை நடத்தும் ஆய்வரங்கம் ஒன்றில் பேசுவதற்கு பிகேஆர் தலைவர் ஒருவர் அழைக்கப்பட்டுள்ளதை வழக்குரைஞர் ஒருவர் தலைமையிலான சிறிய குழு ஒன்று ஆட்சேபித்துள்ளது.

தேர்தல் மனுவைத் தயாரிப்பதற்கான வழி காட்டிகளும் நடைமுறைகளும் என்னும் தலைப்பில் பேசுவதற்கு பிகேஆர் துணைத் தலைமைச் செயலாளர் ஸ்டீவன் சூங் அழைக்கப்பட்டுள்ளதை தாம் ஆட்சேபிப்பதாக முகமட் கைருல் அஸாம் அப்துல் அஜிஸ் என்ற அந்த வழக்குரைஞர் தெரிவித்தார்.

அந்த நடவடிக்கை, “1976ம் ஆண்டுக்கான சட்டத் தொழில் சட்டத்தின் 57வது பிரிவில் கூறப்பட்டுள்ள வழக்குரைஞர் மன்றத்தின் பணிகள், அதிகாரம், பங்கு ஆகியவற்றை” மீறுவதாக அவர் சொன்னார்.

கைருலும் 15 பேர்களைக் கொண்ட அவரது குழுவினரும் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு பதாதைகளுடன் கோலாலம்பூரில் உள்ள வழக்குரைஞர் மன்ற அலுவலகத்துக்கு முன்பு கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வழக்குரைஞர்கள் தங்களது வாடிக்கையாளர்களுடைய நலன்களில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர அரசியலில் அல்ல என்றும் அந்தக் குழு வலியுறுத்தியது.

ஒர் அரசியல்வாதியுமான ஒரு வழக்குரைஞர் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு கிட்டத்தட்ட 85 முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கைருல் கூறிக் கொண்டார்.

“வழக்குரைஞர் மன்றம் அதனைக் கவனிக்க வேண்டும். அந்த வழக்குரைஞர் வாடிக்கையாளர் நலனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசியலில் மட்டும் சுறுசுறுப்பு காட்டக் கூடாது.”

கைருல் சொல்வதை நிராகரித்த வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ, தேர்தல் சட்டங்களை விளக்குவதற்காக அந்த ஆய்வரங்கு நடத்தப்படுவதாகவும் பக்காத்தான் ராக்யாட் சார்பில் பிரச்சாரம் செய்வதற்கு அல்ல என்றும் கூறினார்.Bar1

ஆகவே சட்டத் தொழில் சட்டம் மீறப்படவில்லை என்றும் லிம் குறிப்பிட்டார்.

அந்த ஆய்வரங்கிற்கு கைரி ஜமாலுதின், நஸ்ரி அப்துல் அஜிஸ், சுல்கெப்லி அகமட் போன்ற பிஎன், பக்காத்தான் தலைவர்களையும் வழக்குரைஞர் மன்றம் அழைத்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

“அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆட்வரங்கில் கலந்து கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும் என நான் யோசனை கூறுகிறேன்,” என்றும் லிம் சொன்னார்.