13வது பொதுத் தேர்தலுக்கான பக்காத்தான் ராக்யாட் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் இன்று அறிவிக்கப்பட்டன.
ஆளும் பிஎன் கூட்டணிக்கு முன்னதாக அது தனது தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
“மக்கள் ஒப்பந்தம் மக்கள் நம்பிக்கை” என அந்த ஆவணத்துக்கு தலைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புக்கு ஜிங்காவில் மூன்று பக்காத்தான் கட்சிகளும் தெரிவித்துள்ள பொதுக் கொள்கையின் விரிவாக அது அமைந்துள்ளது.
பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை ஆறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் கூட்டணியின் இணையத் தளத்திலிருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதில் கூறப்பட்டுள்ள (மலேசியாகினி தேர்வு செய்தவை) முக்கிய 10 அம்சங்கள்
1) லைனாஸ் தொழில் கூடத்தை மூடுவது
நீடித்த நிலையான சுற்றுச் சூழல் கொள்கையின் ஒரு பகுதியாக பாகாங், கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்தை நிறுத்துவதற்கு பக்காத்தான் வாக்களிக்கிறது.
“நீடித்த நிலையான சுற்றுச் சூழல் பக்காத்தான் பொருளாதாரக் கொள்கையின் அடையாளச் சின்னமாகும்” என்றும் அந்த ஆவணம் குறிப்பிட்டது.
அத்துடன் ஜோகூர் பெங்கெராங்கில் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தை மறு ஆய்வு செய்யவும், சரவாக்கில் சேதங்களை ஏற்படுத்தக் கூடிய அணைக்கட்டுகளை நிறுத்தவும் வெட்டுமரச் சட்டங்களை சீர்திருத்தவும் பக்காத்தான் வாக்குறுதி அளிக்கிறது.
2) ஏஇஎஸ்-ஸை (AES) ரத்துச் செய்வது
போக்குவரத்துக் குற்றங்களுக்கான ஏஇஎஸ் என்ற தானியங்கி அமலாக்க முறை உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. சேவகர்களை வளப்படுத்தியுள்ளது. ஆகவே அது உடனடியாக நிறுத்தப்படும்.
“வெளியிடப்பட்ட எந்தக் குற்றப்பதிவுகளும் ரத்துச் செய்யப்படும்”
அந்த ஏஇஎஸ்-ஸுக்குப் பதில் பாதுகாப்பான சாலை அடிப்படை வசதிகளிலும் சாலைகளைப்
பயன்படுத்துவோருக்கான கல்வியிலும் நடப்பு தண்டிக்கும் அணுகுமுறைக்கு பதில் எச்சரிக்கை நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்துவதாக பக்காத்தான் வாக்குறுதி அளிக்கிறது.
3) சுகாதாரக் கவனிப்பு வரியைத் தடுப்பது
அடிப்படை சுகாதாரக் கவனிப்பை இலவசமாக வழங்குவதாக பக்காத்தான் உறுதி அளிக்கிறது. ஆகவே நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகம் ‘ஒரே கவனிப்பு முறை’ என அழைக்கப்படும் சுகாதாரக் கவனிப்பு வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்யும் நீண்ட காலத் திட்டத்தை அது நிறுத்தும்.
4) ஊடக சுதந்திரத்தை மேம்படுத்துவது
1984ம் ஆண்டுக்கான அச்சுக் கூட, வெளியீடுகள் சட்டம் உட்பட ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் எல்லாச் சட்டங்களையும் அகற்றப் போவதாக பக்காத்தான் கூட்டணி சொல்கிறது.
அத்துடன் ஆர்டிஎம்-மை தொழில் கழகமாக மாற்றுவதுடன் எல்லா ஊடக அமைப்புக்களும் “நேர்மையுடன் ஊடக சுதந்திரத்தை” பின்பற்றுவதையும் அது உறுதி செய்யும்.
5) எல்லா இசா கைதிகளும் விடுவிப்பது
‘அனைவருக்கும் நீதி, மக்கள் சுதந்திரம்” ஆகிய கோட்பாடுகளுக்கு முரணாக உள்ள எல்லாச் சட்டங்களும் முழுமையாக மறு ஆய்வு செய்யப்ப்படுவதுடன் கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் சேர்ந்த அனைத்து உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (இசா) கைதிகளிடமும் தனது நிர்வாகம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும் என பக்காத்தான் வாக்குறுதி அளிக்கிறது.
அந்த நடவடிக்கை முதலாம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும்.
6) தாங்கக் கூடிய விலையில் வீடுகள்
பக்காத்தான் தனது முதலாவது தவணைக் காலத்தில் குறைந்த விலைப் பிரிவில் (75,000 ரிங்கிட்டுக்கு கீழ்) தாங்கக் கூடிய விலையில் 150,000 வீடுகளையும் நடுத்தர விலைப் பிரிவில் (250,000 ரிங்கிட்டுக்கு கீழ்) கட்டும்.
தாங்கக் கூடிய விலையில் வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்ளவும் கட்டவும் சீர்படுத்தவும் அது தேசிய வீடமைப்புத் தொழில் கழகம் ஒன்றையும் அது அமைக்கும்.
7) போலீஸ் பணிகள்
குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதைச் சமாளிக்க பொது நடவடிக்கைப் படை அளவும் இதர முக்கியமில்லாத பணிகளுக்கான ஊழியர் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு குற்றப்புலனாய்வுத் துறையின் அளவை அதிகரிக்கப்படும்.
அத்துடன் அதன் ஊதியத்தை கட்டம் கட்டமாக 15 விழுக்காடு உயர்த்தப் போவதாகவும் பக்காத்தான் கூறியது.
8) இலவசக் கல்வி, பிடிபிடிஎன் -னை அகற்றுவது
கல்வி என்பது மக்களுடைய உரிமை, அரசாங்கத்தின் பொறுப்பு என வருணித்த பக்காத்தான் தனது நிர்வாகம் பல்கலைக்கழகக் கல்விக்கான கட்டணங்களையும் ஏற்றுக் கொள்ளும் எனத் தெரிவித்தது. அதே வேளையில் தனியார் கல்விக் கூடங்களுக்கு கட்டண உதவித் தொகைகள் கொடுக்கப்படும்.
அத்துடன் பொதுக் கல்விக் கூடங்களில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு வாழ்க்கை செலவு அலவன்ஸ்களை வழங்குவதோடு தனியார் கல்வித் தொழில் வேகமாக வளர்ச்சி காண்பதற்குக் காரணமாக உள்ளது என அந்தக் கூட்டணி பழி சுமத்தும் பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி கடன் நிதி நிறுவனத்தையும் ரத்துச் செய்யும்.
“மக்களுக்குக் உயர் கல்வி இலவசமாக வழங்கப்படும் போது பிடிபிடிஎன் தேவை இல்லை.”
“பிடிபிடிஎன் காரணமாக கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உதவ சிறப்பு வழி முறை ஒன்று உருவாக்கப்படும். ஒவ்வொரு மாணவருடைய நலனும் கவனிக்கப்படுவதை உறுதி செய்வதே அதன் நோக்கமாகும்” என அந்த ஆவணம் தெரிவித்தது.
9) எரிபொருள், மின்சார, தண்ணீர் கட்டணங்களை குறைப்பது
நாட்டின் எண்ணெய் வருமானம் மலிவான எண்ணெய் விலைகள் வழி மக்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை வாதாடுகிறது.
மின்சாரத்தைப் பொறுத்த வரையில் சுயேச்சை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான எரிவாயு உதவித் தொகைகள் வழி நாடு ஆண்டு ஒன்றுக்கு 25 பில்லியன் ரிங்கிட்டை இழப்பதாக பக்காத்தான் குறிப்பிட்டுள்ளது. அந்தத் தொகை குறைவான மின் கட்டணங்கள் வழி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அது கருதுகிறது.
நெடுஞ்சாலை டோல் கட்டணங்கள் பற்றிக் குறிப்பிடும் பக்காத்தான், டோல் கட்டணங்களை ‘படிப்படியாக’ ரத்துச் செய்யும் ‘நோக்கத்துடன்’ நாட்டின் நெடுஞ்சாலைகளை எடுத்துக் கொள்ளப் போவதாகவும் பக்காத்தான் உறுதி அளித்துள்ளது.
அந்தக் கொள்கைகளும் தண்ணீர்க் கட்டணத்தைக் குறைக்கும் நடவடிக்கையும் வாழ்க்கைச் செலவுகளைக் குறைக்க உதவும் எனப் பக்காத்தான் தெரிவித்தது.
10) அந்நியத் தொழிலாளர் எண்ணிக்கையை ஒரு மில்லியன் குறைப்பது
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு மில்லியன் அந்நியத் தொழிலாளர்களை அகற்றி வேலைகளை உள்ளூர் மக்கள் ஏற்றுக் கொள்வதை உறுதி செய்வதற்கு ‘விரிவான ஏற்பாடு’ ஒன்றைத் தான் அறிமுகம் செய்யப் போவதாகவும் பக்காத்தான் கூறியது.