பிகேஆர் நிகழ்வில் 1மலேசியா என்று கூவி அதிர்ச்சி ஏற்படுத்திய அறிவிப்பாளர்

1pkrஅண்மையில் ஜாவியில் சாப் கோ மே தினத்தில் கால்-மெரோதோன் போட்டியை ஏற்பாடு செய்ததற்காக நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டது பிகேஆர். அதற்காக அதை பிஎன் கடுமையாகக் குறைகூறியிருந்தது.

அதைவிட மோசமாக அந்த நிகழ்வில் நடந்த ஒரு சம்பவம் பிகேஆருக்கு மேலும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. அந்நிகழ்வின் அறிவிப்பாளர் “1மலேசியா” என்று உரக்கக் கூவியது அங்கு குழுமியிருந்தோருக்கு அதிர்ச்சியாக இருந்தது. நாட்டின் பல்வேறு இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்ப்பதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் உருவாக்கப்பட்ட ஒரு சுலோகம் ‘1மலேசியா’.

ஆனால், பக்காத்தான் ரக்யாட் அதைப் பயன்படுத்துவதில்லை. பிஎன் என்னதான் 1மலேசியா என்று கூவினாலும் அதில் ஆழமான அர்த்தம் இல்லை என்பது அதன் கருத்து. அதனால் அச்சுலோகத்தை ஏற்பதில்லை.

இந்நிலையில் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது பேரதிர்ச்சியாக அமைந்தது. அதை மலேசியாகினிக்குத் தெரிவித்த வட்டாரம், “துணை முதலமைச்சர் I மன்சூர் ஒத்மான் மேற்பார்வையில் நடந்த ஒரு நிகழ்வில் இவ்வளவு கவனக்குறைவா?”, என்று வினவியது.

“மன்சூரின் உதவியாளர் இஜாட் புகாரி முகம்மட் கம்ரிதான் ஏற்பாட்டுக் குழுத் தலைவர். அவர் அதற்கு ஒத்திகைகூட பார்க்கவில்லை”.

அது பினாங்கு பிகேஆர் தலைவருமான மன்சூருக்கு எதிரான “சதி” போலத் தெரிகிறது என்று குறிப்பிட்ட அவ்வட்டாரம், அச்சம்பவம் அவருக்கு மிகுந்த “சங்கடத்தையும் தலைக்குனிவையும்” ஏற்படுத்தியுள்ளது என்று கூறியது.

அறிவிப்பாளர் நம்ம ஆள்’

மலேசியாகினி நேற்று மன்சூரைத் தொடர்புகொள்ள முனைந்தது. அவரிடமிருந்து மறுமொழி இல்லை.

இஜாட்டைத் தொடர்புகொண்டபோது, அறிவிப்பாளர் “1மலேசியா” என்று கூவியதை மறுத்தார். “அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அறிவிப்பாளர் நம்ம ஆள்”, என்றார்.

அவர் மேலே விவரிக்கவில்லை. ஷா அலம் பக்காத்தான் மாநாட்டுக்குச் சென்ற மன்சூர் திரும்பியதும் விளக்கமான அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

நிகழ்ச்சிக்குச் சரியான திட்டமில்லை; ஒத்திகைகூட நடக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியபோது, “அது உண்மைதான்” என்று ஒப்புக்கொண்டார்.

மன்சூர் திரும்பியதும் நிகழ்வில் நடந்த குளறுபடிக்கான காரணத்தைக் கண்டறிய உள்விசாரணை நடக்கும் எனத் தெரிகிறது.

நேற்று சீனமொழி நாளேடா நன்யாங் சியாங் பாவில் வந்திருந்த ஒரு செய்தி, அது பினாங்கு பிகேஆருக்குச் சங்கடத்தை உண்டுபண்ணுவதற்கு பிஎன்-ஆதரவாளர்கள் செய்த ‘சதி’ என்று குறிப்பிட்டிருந்தது.

அறிவிப்பாளர் “1மலேசியா” என்று கூவியதுடன் 1மலேசியா பாடலையும் போட்டார். அதைக் கேட்டு ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள வந்திருந்தோரும் மற்றவர்களும் ‘இதென்ன வேடிக்கை’ என்பதுபோல் சிரித்தார்கள்.

மன்சூர் அச்சம்பவத்தால் அத்திரமடைந்தது தெளிவாக தெரிந்தது.

பிஎன் ஆதரவாளர்கள் விரித்த ‘வலையில்’ தெரியாமல் சிக்கிக்கொண்டதை இஜாட் ஒப்புக்கொண்டார் என்றும் நன்யாங் கூறியது.

TAGS: