மலேசிய இழுபறி மீது சுல்தானை எச்சரிக்கிறார் பிலிப்பீன்ஸின் அக்கினோ

suluமலேசியாவின் சபா மாநிலத்தில் ஆயுதமேந்திய தமது ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட இழுபறியை சுலு சுல்தான் முடிவுக்குக் கொண்டு வரா விட்டால் ‘சட்டத்தின் முழு பலத்தையும்’ அவர் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பிலிப்பீன்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கினோ எச்சத்துள்ளார்.

சுல்தான் ஜமாலுல் கிராம் lll ஆயுதமேந்திய 30 பேர் உட்பட தமது 150 ஆதரவாளர்களை போர்னியோ தீவில் உள்ள சிறிய தீவு ஒன்றிலிருந்து திருப்பி அழைக்க வேண்டும் என அவர் சொன்னார்.

கடந்த இரு வாரங்களாக அந்த 150 பேரும் மலேசியப் பாதுகாப்பு படையினருடன் இழுபறிப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

“நீங்கள் ஒத்துழைக்க மறுத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நியாயம் கிடைக்க சட்டத்தின் முழு வலிமையும் பயன்படுத்தப்படும்,” என தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அறிக்கையில் அக்கினோ தெரிவித்தார்.

“இந்த நிலை நீடிக்கக் கூடாது. உங்கள் மக்களுடைய உண்மையான தலைவராக நீங்கள் இருந்தால் அமைதியாக தாயகம் திரும்புமாறு உங்கள் ஆதரவாளர்களுக்கு நீங்கள் ஆணையிட வேண்டும்.”

“நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் முட்டாள்தனமான இந்த நடவடிக்கை மூலம் சட்டத்தை மீறியுள்ளது” பற்றி விசாரிக்குமாறு தாம் ஆணையிட்டுள்ளதாகவும் அக்கினோ எச்சரித்தார்.sulu1

குடிமக்கள் போரைத் தூண்டுவதை தடுக்கும் சட்டத்தை சுட்டிக் காட்டிய அவர், அந்தக் குற்றத்திற்கு 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு மலேசிய மீனவர் கிராமம் ஒன்றை தென் பிலிப்பின்ஸைச் சேர்ந்த கிராம் ஆதரவாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். அவர்களுக்கு சுல்தான் அனுமதி வழங்கியதாக சொல்லப்படுகின்றது.

போர்னியோவில் சில பகுதிகளையும் தென் பிலிப்பின்ஸ் தீவுகளையும் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த சுலு சுல்தான் வம்சாவளியை தாம் சார்ந்தவர் என கிராம் சொல்லிக் கொள்கிறார்.

1870களில் வட போர்னியோவை சுலு சுல்தான் ஐரோப்பியர்களிடம் குத்தகைக்குக் கொடுத்தார். கால ஓட்டத்தில் சுல்தான் அதிகாரங்கள் குறைந்து விட்ட போதிலும் சபா இன்னும் குத்தகைத் தொகையை கொடுத்து வருகின்றது.

சுல்தான் வாரிசுகளுக்கு மலேசியா இன்னும் பெயரளவுக்கு ஆண்டுதோறும் இழப்பீடுகளைக் கொடுத்து வருகின்றது.

அந்த இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது சுல்தானுடைய கோரிக்கைகளில் ஒன்றாகும். தமது ஆதரவாளர்கள் சபாவில் தொடர்ந்து இருப்பதற்கு உரிமை பெற்றவர்கள் என்றும் அவர் கூறுகிறார். காரணம் அந்த  நிலம் அவர்களுக்குச் சொந்தமானதாகும். மலேசியாவுக்கு அல்ல என அவர் குறிப்பிடுகிறார்.

அந்த இழுபறியை அமைதியாக முடிவுக்குக் கொண்டு வர தமது அரசாங்கம் மலேசிய அரசாங்கம் முயற்சி செய்வதாகவும் அக்கினோ தெரிவித்தார்.