ஒப்புதல் அளிக்க புத்ராஜெயாவுக்கு இரண்டு வார காலக்கெடு

limபினாங்கில் ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு ஒப்புக் கொள்வதற்கு கூட்டரசு அரசாங்கத்துக்கு இரண்டு வார காலக்கெடுவை பினாங்கு மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது.

கூட்டரசு அரசாங்கம் அதற்கு ஒப்புதல் அளிக்கத் தவறினால் பினாங்கில் உள்ள இரண்டு நகராட்சி மன்றங்களிலும் தேர்தல்களை நடத்துவதற்கான அதிகாரம் மாநில அரசாங்கத்துக்கு உண்டு பிரகடனம் செய்யுமாறு நீதிமன்றத்தில் தாம் வழக்குத் தொடரப் போவதாக முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

பினாங்கு தீவு நகராட்சி மன்றம், செபெராங் பிராய் நகராட்சி மன்றம் ஆகியவையே அந்த இரண்டு ஊராட்சி மன்றங்களாகும்.

“கூட்டரசு அரசமைப்பின் 9வது பட்டியலின் கீழ் ஊராட்சி மன்றம் மாநில விவகாரம் என்னும் நிலையை மாநில அரசாங்கம் எடுத்துள்ளது,” என அவர் சொன்னார்.

அரசமைப்பின் 9வது பட்டியல், அரசமைப்பின் 113(4) பிரிவு ஆகியவற்றின் கீழ் ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு மாநிலச் சட்டமன்றத்துக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கிளந்தான், சிலாங்கூர் ஆகியவற்றை அடுத்து கூட்டரசு அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடுக்கும் மூன்றாவது மாநிலம் பினாங்கு ஆகும்.

அந்த வழக்கில் பிரதிவாதிகளாக கூட்டரசு அரசாங்கமும்  தேர்தல் ஆணையமும் குறிப்பிடப்படும். அந்த வழக்கு உயர் நீதிமன்ற கட்டத்துக்கு ‘செல்லாமால் நேரடியாக கூட்டரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

TAGS: