கொள்கை அறிக்கையில் 3 மாநிலங்கள் விடுபட்டு விட்டதை பக்காத்தான் ஒப்புக் கொண்டுள்ளது

oilபெட்ரோனாஸிடமிருந்து முழு எண்ணெய் உரிமப் பணம் பெற வேண்டிய மாநிலங்களில் கிளந்தான், திரங்கானு, பாகாங் ஆகியவையும் அடங்கும் என்பதை குறிப்பிடாமல் விட்டு விட்டதை பக்காத்தான் ராக்யாட் இன்று ஒப்புக் கொண்டுள்ளது.

“அது தவறாகும். சபா, சரவாக் மட்டுமின்றி எண்ணெய் உற்பத்தி செய்யும் மாநிலங்களும் என அது வாசிக்கப்பட வேண்டும்,” என பாஸ் மத்திய செயற்குழு உறுப்பினர் சுல்கெப்லி அகமட் கூறினார்.

பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையைத் தயாரித்த குழுவில் அவர் இடம் பெற்றுள்ளார்.

“அது அச்சிடப்பட்ட போது அது அவ்வாறு இல்லை, அது மிகவும் வருத்தத்தைத் தருகிறது. நேற்று பக்காத்தான் மாநாட்டுக்குப் பின்னர் தான் எங்களிடம் அது தெரிவிக்கப்பட்டது.”

எதிர்கால பயன்பாட்டுக்கான பிரதிகளில் பக்காத்தான் திருத்தம் செய்யும் என அவர் விளக்கினார்.oil1

அந்த தவறை விளக்குவதற்காக நாளை பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்கள் சந்திப்புக்கு பக்காத்தான் ஏற்பாடு செய்துள்ளதாகவும் சுல்கெப்லி சொன்னார்.

அந்தத் தவறை உறுதி செய்த பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் சபா, சரவாக் சம்பந்தப்பட்ட கூச்சிங் பிரகடனத்தை பற்றியே விவாதங்கள் நடந்தன எனக் குறிப்பிட்டார். உண்மையில் அனைத்து பெட்ரோலிய உற்பத்தி மாநிலங்களும் அதில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.

அது எப்படியோ இறுதி பிரதியில் விடுபட்டு விட்டது என்றும் ராபிஸி சொன்னார்.

“அது சிறிய குழப்பம் தான். ஆனால் நாங்கள் எல்லா மாநிலங்களையும் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்வோம்.”

 

TAGS: