தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை (03.03.2013) காலை 10.30 மணியளவில் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் (Water Fountain, Brickfields) நடைபெறவுள்ளது. அதில் அனைவரையும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.
இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. 2009-ஆம் ஆண்டு முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட போரில் 150, 000-க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் போரின் இறுதிக் கணங்களில் நடந்த இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் மட்டும் இன்னமும் நீதி கிடைக்கவில்லை.
‘சனல் 4’ தொலைக்காட்சி அங்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவாக காட்டும் “இலங்கையின் கொலைக்களம்” என்ற தலைப்பிலான ஆவணப்படத்தை ஏற்கனவே வெளியிட்டது. இப்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் ஐநா மனித உரிமை ஆணைய மாநாட்டிற்காக அதிர வைக்கும் ஆதாரங்களுடன் “பாதுகாப்பு வலயம் : இலங்கையின் கொலைக்களம்” என்ற தலைப்பில் மற்றுமொரு ஆவணப்படத்தை சனல் 4 தயாரித்துள்ளது. அந்தப் புதிய ஆவணப்படத்தில் பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் உயிருடன் இருந்த கடைசி நேர புகைப்படங்கள் உட்பட நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக கருதப்படும் இனப்படுகொலை சார்புடைய காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
மேலும், ஐநா-வின் நிபுணத்துவ அறிக்கை, அதன் உள்ளக அறிக்கைகளும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றன.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22-வது கூட்டத் தொடர் இன்று சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரை இடம்பெறவுள்ளது.
ஐக்கியநாடுகள் சபை மனித உரிமை பேரவையின் தூதரக அலுவலகம், இலங்கையின் மனித உரிமைகள் அத்துமீறல் தொடர்பில் ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. உலக அளவில் அதிகாரத்திறமை வாய்ந்தவர்களில் ஒருவராக கருதப்படும் மனித உரிமை பேரவையின் தூதர் நவநீதம்பிள்ளை தயாரித்துள்ள அந்த அறிக்கை கடந்த 19-ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வட்டமேசை பேராளர் மாநாட்டில் அம்பிகா சீனிவாசன் அவர்களால் விளக்கப்பட்டது. அதன்படி இலங்கை மனித உரிமை அத்துமீறல்களுக்கு நிரந்தர தீர்வு என்பது நீண்டகாலமாக ஆணி வேராக இருந்து வரும் இன முரண்பாடுகளுக்கு தீர்வாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து அடுத்த மாதம் ஜெனீவா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கொண்டுவர தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தை மலேசியாவும் முன்மொழிய வேண்டும் என்ற தீர்மானம் ஒன்று நாடாளுமன்ற வட்டமேசை பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆண்டு ஜெனீவா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் நடுநிலை காத்த மலேசியா இந்த முறை தனது நிலைப்பாட்டை மாற்றி மலேசியத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்பட வேண்டும். இலங்கைக்கு அருகில் அதிக தமிழர்கள் வாழும் ஒரு நாடாக மலேசியா திகழ்கிற நிலையில், இலங்கைக்கு எதிராக வாக்களிப்பது ஒரு புறமிருக்க மலேசியா அமெரிக்காவோடு இணைந்து தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என வலியுறுத்தவே இந்த மாபெரும் பிரார்த்தனைக் கூட்டம் என்கிறார் வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.
மாபெரும் பிரார்த்தனை கூட்டத்தின் விபரங்கள் பின்வருமாறு:-
நாள் : 3 மார்ச் 2013 – ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை மணி 10.30 முதல்
இடம்: பிரிக்பீல்ட்ஸ் தாமரைத் தடாகம்
அனைவரும் கருப்பு உடை அணிந்து வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த மாபெரும் பிரார்த்தனை செம்பருத்தி.கொம் மற்றும் கட்சி சார்பற்ற வகையில் செயல்படும் மலேசிய நாடாளுமன்ற கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. மேலதிகத் தொடர்புகளுக்கு: 03-26980622