பிலிப்பினோ ஊடுருவல்காரர்கள் “தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்”

borderசபா கடலோரப் பகுதியில் இம்மாதத் தொடக்கத்திலிருந்து தாங்கள் ஆக்கிரமித்துள்ள கிராமத்திலிருந்து தங்களை வெளியேற்றுவதற்குப் படைபலத்தை மலேசியப் போலீசார் பயன்படுத்தினால் எதிர்த்துப் போராடப் போவதாக பிலிப்பினோ ஊடுருவல்காரர்கள் அறிவித்துள்ளனர்.

“நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றோம்,” என சுலு சுல்தான் என தம்மை சுயமாகப் பிரகடனம் செய்து கொண்டுள்ள ஜமாலுல் கிராமின் சகோதரரான அஸ்ஸிமுடி கிராம் கூறினார்.

லாஹாட் டத்து-விலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்போங் தண்டுவோ-வை ஆக்கிரமித்துள்ள ஆயுதமேந்திய கும்பலுக்கு  65 வயதான அஸ்ஸிமுடி தலைமை தாங்குகிறார்.

அவர் இன்று காலை தொலைபேசி வழி மலேசியாகினிக்குப் பேட்டி அளித்தார். மலேசிய அதிகாரிகளுடன் மோதுவது தமது குழுவின் நோக்கம் அல்ல என அவர் திரும்பத் திரும்பச் சொன்னார்.

“நாங்கள் எங்கள் சொந்த நிலத்தில் அமைதியாக வாழ விரும்புகிறோம். ஆனால் அவர்கள் படைபலத்தைக் கொண்டு எங்களை வெளியேற்ற முயலுகின்றனர்,” என அந்தப் பேட்டி முழுவதும் அமைதியாகப் பதில் அளித்த அஸ்ஸிமுடி சொன்னார்.

“நாங்கள் மலேசிய அதிகாரிகளுடன் அமைதியாகப் பேசி எங்கள் நிலத்துக்குத் திரும்ப விரும்புகிறோம். சபா வருமானத்தை மலேசியர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர்.”border1

அவர் எந்த மலேசிய அதிகாரியுடன் பேச விரும்புகிறார் என்ற கேள்விக்குப் பதில் அளித்த அஸ்ஸிமுடி, மணிலாவில் உள்ள தமது சகோதரர் ஜமாலுலிடம் பேச்சுக்களை விட்டு விடுவதாகச் சொன்னார்.

பிப்ரவரி 12ம் தேதியிலிருந்து நீடிக்கும் அந்த இழுபறியை முடிவுக்குக் கொண்டு வரப் போலீசார் எண்ணம் கொண்டுள்ளதாக தேசியப் போலீஸ் படைத் துணைத் தலைவர் காலித் அபு பாக்கார் நேற்று கூறியிருக்கிறார்.

“நாங்கள் அந்த இழுபறிக்கு முடிவு கட்டுவோம். மக்கள் கவலைப்படக் கூடாது. இறைவன் கருணை இருந்தால் கூடிய விரைவில் அந்த விவகாரம் முடிவுக்கு வரும்,” என அவர் நேற்று லஹாட் டத்துவில் நிருபர்களிடம் கூறினார்.

தமது ஆட்களிடையே உட்பூசல் ஏற்பட்டுள்ளதாகவும் பலர் மலேசிய அதிகாரிகளிடம் சரணடைய  விரும்புவதாகவும் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டதாகவும் ஊடகங்கள் சொல்வதை அஸ்ஸிமுடி நிராகரித்தார்.

“துப்பாக்கிச் சூடுகள் ஏதுமில்லை. எனது ஆட்கள் என் கட்டுப்பாட்டில் உள்ளனர். அது உண்மை அல்ல. எங்களைப் பலவீனப்படுத்துவதற்காகச் சொல்லப்படும் பொய்யான தகவல்கள் அவை,” என்றார் அவர்.

தங்களுக்கு உணவுப் பொருள் கிடைப்பதை போலீசார் நிறுத்தி விட்ட போதிலும் தமது ஆட்கள் வாழைப்பழங்களைச் சாப்பிட்டு உயிர் வாழ்வதாக அவர் சொன்னார். அதே வேளையில் உள்ளூர் அனுதாபிகள் சிலர் மற்ற உதவிகளையும் செய்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

“அவர்கள் நன்றாக இருக்கின்றனர்,” எனப் பதில் அளித்த அஸ்ஸிமுடி தமது ஆட்களுக்கு மருத்துவ உதவி ஏதும் தேவை இல்லை என்றார்.