கியூபாவில் முடிவுக்கு வருகிறது கெஸ்ரோக்களின் ஆட்சி!

Castro Cubaஎதிர்வரும் 2018 ஆம் ஆண்டுடன் அதிபர் பதவியிலிருந்து விலகப்போவதாக கியூபாவின் அதிபர் ரோல் கெஸ்ரோ அறிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக அந்நாட்டுஅதிபராக தெரிவாகியுள்ள ரோல் கெஸ்ரோவின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு நிறைவடைகின்ற நிலையிலேயே அவர் இவ் அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அந்நாட்டின் துணை அதிபராக மிகுவெல் டயஸ் அந்நாட்டின் புதிய நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒருவேளை ரோல் கெஸ்ரோவினால் அவரது முழு பதவிக்காலத்தையும் வகிக்க முடியாமல் போனால் அப்பதவியை பொறுப்பேற்கும் முகமாகவே மிகுவெல் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

அந்நாட்டை ஆண்டு வந்த சர்வாதிகாரியான பல்ஜெனிகோ பெடிஸ்டா  1959 ஆண்டு அங்கு இடம்பெற்ற புரட்சியையடுத்து பதவி நீக்கப்பட்டதையடுத்து பிடல் கெஸ்ரே அந்நாட்டின் தலைவராக திகழ்ந்து வந்தார்.

பிடல் கெஸ்ரோ சுகவீனமுற்றதைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு ரோல் கெஸ்ரோ அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் ரோல் கெஸ்ரோ பதவி விலகும் முடிவை அறிவித்துள்ளமையினால் கியூபாவில் கெஸ்ரோக்களின் ஆட்சி முடிவடையவுள்ளது.

இதனையடுத்து கியூபாவின் அடுத்த கட்ட பொருளாதார மற்றும் இராஜதந்திர நகர்வுகள் எவ்வாறு அமையப்போகின்றது என முழு உலகினது பார்வையையும் திருப்பியுள்ளது.

எனினும் அடுத்த தலைவராக பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படும் மிகுவெல் டயஸ் கெஸ்ரோவின் தீவிர ஆதரவாளர் என வர்ணிக்கப்படுகின்றார்.

கெஸ்ரோ இல்லாத கியூபாவில் அமெரிக்காவின் தலையீடுகள் எவ்வாறு இருக்குமென்பது தொடர்பில் இப்போதே விவாதம் தொடங்கியுள்ளதாகத் தெரிகின்றது.