நியூயார்க்: ஆஸ்கார் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியின் ஆடை வடிவத்தை, ஈரான் தொலைக்காட்சிகள் மாற்றம் செய்து ஒளிபரப்பியது.
அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், அமெரிக்க அதிபரின் மனைவி மிச்சேல் ஒபாமா பங்கேற்றார். ஈரானில், 1979ல், அமெரிக்க தூதரக அதிகாரிகள் 52 பேர் கடத்தப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து, ‘அர்கோ’ என்ற படம் தயாரிக்கப்பட்டது.
சிறந்த படத்துக்கான ஆஸ்கார் விருது, ‘அர்கோ’வுக்கு கிடைத்தது. அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வுக்கு விளம்பரம் தேடும் வகையில், ‘அர்கோ’ படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஈரான் குறை கூறியிருந்தது.
இந்த படத்துக்கான விருதை வழங்கிய மிச்சேல் கை இல்லாத ஆடையை அணிந்திருந்தார். ஆஸ்கார் விருது வழங்கும் விழா நிகழ்ச்சிகளை ஈரான் தொலைகாட்சிகளும் ஒளிபரப்பின. இஸ்லாமிய நாடான ஈரானில், பெண்கள் கவர்ச்சி ஆடை அணிய அனுமதியில்லை. இதே போல, தொலைகாட்சிகளிலும் கவர்ச்சி ஆடை அணியும் பெண்களை பார்க்க முடியாது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மிச்சேல் அணிந்து வந்த கவர்ச்சி ஆடையை, ஈரான் தொலைகாட்சிகள் கிராபிக்ஸ் மூலம், கவர்ச்சி இல்லாத ஆடையாக மாற்றி ஒளிபரப்பியது.