அல்டான்துயா கொலை தொடர்பில் கைது செய்யப்படுவதற்குமுன் அவர் கொல்லப்பட்டதை எண்ணி அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிண்டா மனம் வருந்தியதாக தனியார் துப்பற்றிவாளர் பி.பாலசுப்ரமணியம் கூறினார்.
“அல்டான்துயாவுக்கு சேவைக்கட்டணமாக (கமிஷன்) யுஎஸ்$500,000 நான் கொடுத்திருக்க வேண்டும்”, என்று கைது செய்யப்பட்ட நாளில் ரசாக் குறிப்பிட்டதாக பாலசுப்ரமணியம் நினைவுகூர்ந்தார்.
ஐந்தாண்டுகளுக்குமுன் நாட்டைவிட்டுத் தப்பியோடிய பாலசுப்ரமணியம் நேற்றிரவு முதல்முறையாக பொதுவில் தோன்றி அல்டான்துயா இறப்புக்கு இட்டுச்சென்ற சம்பவங்களை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தார்.
அல்டான்துயா (இடம்) கொல்லப்பட்டதை அறிந்ததும் ரசாக்கிடம் பாலசுப்ரமணியம், “பாஸ், நான் என்ன சொன்னேன் உங்களிடம்? போலீஸில் புகார் செய்யச் சொன்னேன். நீங்கள் போலீசில் புகார் செய்திருக்க வேண்டும்”, என்றார்.
அறிவுரையைப் பின்பற்றவில்லை
அல்டான்துயா தம்மை நெருங்காமல் பார்த்துக்கொள்ளுமாறு ரசாக் கூறியபோது அதைப் பற்றி போலீசில் புகார் செய்யச் சொன்னார் பாலசுப்ரமணியம்.
ஆனால், “மிக முக்கியமான நபர் சம்பந்தப்பட்டிருப்பதால்” ரசாக் அதைச் செய்யவில்லை. அந்த மிக முக்கியமான நபர் அப்போதைய தற்காப்பமைச்சரும் இப்போதைய பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக் என்று பிறகு சொல்லப்பட்டது.
அல்டான்துயா ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் செய்யப்பட்டதில் தாம் ஆற்றிய சேவைக்காக ரசாக்கிடம் யுஎஸ்500,000 (ரிம 1,550,750)-உம் மங்கோலியா திரும்பிச் செல்ல மூன்று விமானப் பயணச் சீட்டுகளும் கேட்டதாகத் தெரிகிறது.
ரசாக் ( இடம்), நவம்பர் 7-இல் பாலசுப்ரமணியத்துடன் உரையாடிவிட்டு 30 நிமிடங்கள் கழித்து விஸ்மா லீ ரப்பரில் உள்ள தம் அலுவலகத்துக்குச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.
அல்டான்துயா கொலைக்கு உடந்தை என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அதே வேளை, அல்டான்துயாவை துப்பாக்கியால் சுட்டு அவரது உடலை வெடிவைத்து உருத்தெரியாமல் சிதறடித்த சிறப்பு நடவடிக்கை பிரிவைச் சேர்ந்த இரு போலீஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நேற்றிரவு கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மண்டபத்தில் சுமார் 1,000 பேர் கூடி இருந்து அந்த மங்கோலிய பெண்ணின் கொலை பற்றி பாலசுப்ரமணியம் விவரிப்பதை உன்னிப்பாக செவிமடுத்தனர்.
அவர் புதிதாக அதிகம் சொல்லவில்லை. பெரும்பாலும் ஏற்கனவே அறிந்த செய்திகளைத்தான் சொன்னார்.
என்றாலும், இரவு மணி 11.30வரை அவர் சொல்வதை கூட்டத்தினர் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.
ரசாக்குக்கும் தமக்குமிடையிலான உறவு பற்றியும் முதலாவது சத்திய பிரமாணம் செய்தது பற்றியும் மறுநாளே கட்டாயத்தின்பேரில் இரண்டாவது சத்திய பிரமாணம் செய்ய நேர்ந்ததையும் அன்வார் இப்ராகிமைக் களங்கப்படுத்த தமக்குக் கையூட்டு கொடுப்பதற்கு நடந்த முயற்சிகள் பற்றியும் பாலசுப்ரமணியம் விவரித்தார்.
அந்நிகழ்வில் சுவாராம் செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல், கேலிச்சித்திர ஓவியர் ஜூனார் முதலானோரும் பேசினார்கள்.
இரண்டாவது சத்திய பிரமாணத்தைத் தயாரித்துக் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்குரைஞர் பற்றியும் அவரிடம் வினவப்பட்டது. அதற்கு அவர், “உண்மையில் அது எனக்குத் தெரியாது. தீபக் சொல்லித்தான் அது சிசில் எப்ராஹம் (இடம்) என்று தெரிந்து கொண்டேன்”, என்றார்.