சான்று காட்டுங்கள்: பாலாவுக்கு பெர்காசா வலியுறுத்து

1perkasa ibமலாய் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசா, பக்காத்தான் ரக்யாட்டுக்குப் பரப்புரை செய்ய நாடு திரும்பியுள்ள தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் மங்கோலியப் பெண் அல்டான்துயா ஷாரீபுவின் கொலையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குத் தொடர்புண்டு என்று கூறுவதற்கு ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

பாலா ஆதாரம் காண்பிக்கத் தவறினால், மாற்றரசுக் கட்சிக்கு ஆதரவான வழக்குரைஞர் கூட்டமொன்று நஜிப்புக்கும் அரசாங்கத்துக்கும் களங்கம் உண்டுபண்ண சதி செய்கிறது என்றுதான் பொருளாகும் என அந்த என்ஜிஓ-வின் தலைவர் இப்ராகிம் அலி கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருக்கிறது.

பாலாவும் மாற்றரசுக் கட்சியினரும் “அலங்காரப் பேச்சுகளின்”வழி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்மறையான தோற்றத்தை உருவாக்க முனைகிறார்கள் என்று இப்ராகிம் (இடம்) கூறினார்.

“ஆதாரம் காண்பிக்காமல் பேசலாம் என்றால் எவர் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பேசலாமே.

“பாலாவால் சான்று காண்பிக்க முடியாதவரை நஜிப்புக்கு எதிரான அவரின் அபத்தமான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பக்கூடாது”, என்று அந்த பாசிர் மாஸ் எம்பி குறிப்பிட்டார்.

1perkasaநாடு கடந்து வாழ்ந்துகொண்டிருந்த பாலா, ஞாயிற்றுக்கிழமை கேஎல் அனைத்துல விமான நிலையத்தில் வந்திறங்கியதும் முதல் வேலையாக ஜூலை 2008-இல், தாம் செய்த முதல் சத்துயபிரமாணம்தான் உண்மையானது என்று சத்தியம் செய்தார். அதில் அவர் நஜிப்புக்கு அல்டான்துயா கொலையில் தொடர்புண்டு என்று கூறியிருந்தார்.

நேற்றிரவு கோலாலும்பூரில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் அல்டான்துயா இறப்புக்கு இட்டுச்சென்ற சம்பவங்களை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தார்.

அந்நிகழ்வு நடைபெறுவதற்குமுன் அது பற்றி அரசாங்க ஆதரவு என்ஜிஓ-வான ஜாரிங்கான் மலாயு மலேசியாவின் துணைத் தலைவர் ஒமார் சாலே அதற்கு எதிராக டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்நிகழ்வை ஏற்பாடு செய்த சோலிடேரிடி அனாக் மூடா மலேசியாவின் தலைவரும் பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவருமான பட்ருல் ஹிஷாம் ஷாஹரினுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் போலீசாரைக் கேட்டுக்கொண்டார்.

நஜிப்பைக் களங்கப்படுத்துவதற்காக அது நடத்தப்படுகிறது என்றாரவர்.

அதில் பாலா கலந்துகொள்வது “தேசிய நல்லிணக்கத்துக்கு ஒரு மிரட்டலாகும்” என்றும் அவர் கூறிக்கொண்டார்.