மலேசியப் படைகளை எச்சரிக்க பிலிப்பினோ கும்பல் துப்பாக்கிச் சூடு

suluமூன்றாவது வாரமாக லஹாட் டத்துவில் பதுங்கியுள்ள பிலிப்பினோ கும்பல் ஒன்று 24 மணி நேரத்துக்கு முன்பு துப்பாக்கிச் சூடுகளைக் கிளப்பியதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறின.

மலேசிய பாதுகாப்புப் படைகளை எச்சரிப்பதற்காக தாங்கள் அவ்வாறு சுட்டதாக பின்னர் அந்தக் கும்பலைச் சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆறு மலேசிய வீரர்கள் லஹாட் டத்து நகரத்திலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்போங் தண்டுவோவுக்கு அருகில் வந்ததைப் பார்த்த அந்தக் கும்பலைச் சேர்ந்த  ஒருவர் ஆகாயத்தை நோக்கிச் சுட்டதாக மலேசியாகினி தொடர்பு கொண்ட போது சுலு சுல்தான் எனத் தம்மைப் பிரகடனம் செய்து கொண்டுள்ள மூன்றாவது ஜமாலுல் கிராமின் சகோதரர் அஸ்ஸிமுடி கிராம் தெரிவித்தார்.

“ஒவ்வொருவரும் அங்கு சென்றோம். நானும் பின் தொடர்ந்தேன். நான் அங்கு சென்றதும் என்ன நடந்தது என வினவினேன்.”

“மலேசிய வீரர்களைக் கண்டதும் எச்சரிப்பதற்காக ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு கிளப்பப்பட்டதாக அவர்கள் கூறினார். ஆறு மலேசியர்கள் மூன்று பிரிவுகளாக வந்தனர். அவர்கள் பின்னர் ஒடி விட்டனர்,” என அவர் தொலைபேசி வழி தெரிவித்தார்.

தமது பிரிவைச் சேர்ந்த 130 பேரும் அமைதியாக இருப்பதாகவும் சரணடைய எண்ணவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.sulu1

தங்களைச் சரணடையுமாறு இறுதி எச்சரிக்கை விடுக்கும் அனாமதேயத் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். என்றாலும் “நிலைமை தீர்க்கப்படும் வரையில் இருக்கப் போவதாக” அவர் சூளுரைத்தார்.

ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் செயல்பட்ட சுலு சுல்தான் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என கிழக்கு சபா மீது தமது பிரிவினர் உரிமை கொண்டாடுவதாக அவர் வலியுறுத்தினார்.

உணவுப் பொருள் விநியோகம் பற்றிக் குறிப்பிட்ட அவர், கம்போங் தண்டுவோவைச் சுற்றிலும் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதால் உணவுப் பொருள் கிடைக்கவில்லை எனச் சொன்னார். என்றாலும் “சுலு மக்களாகிய நாங்கள் காடுகளிலும் உயிர்வாழும் ஆற்றலைக் கொண்டவர்கள்” என்றார் அவர்.