பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்தியர்களுக்கு ஏதுமில்லை என்பது, இந்தியர்களை திசை திருப்பும் பார்சானின் வழக்கமான பாணி என்று கூறுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
தமிழ்ப்பள்ளியும் அதே பக்கத்தில்தான்
இன்றைய நாளிதழ்களில் பக்கத்தான் கொள்கை அறிக்கையில் இந்தியர்களுக்கு எதுவுமே இல்லை என்று ம.இ.காவின் தேசிய உதவித் தலைவரும் துணையமைச்சருமான சரவணன், கூறியுள்ளார். பரிதாபத்திற்குரிய அவருக்கு, ஆங்கில மற்றும் மலாய் மொழியில் வழங்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் இருந்தால் தமிழ்ப் பிரதியையாவது படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்றாரவர்.
சீனப் பள்ளிகள் பற்றி பேசியுள்ளார், ஆனால் அதே 9 ஆம் பக்கத்தில் தமிழ்ப்பள்ளிகள் பற்றி குறிப்பிட்டுள்ளதைக் காண அவருக்கு கண்கள் கூசுகிறதா என்று சேவியர் வினவினார்.
சலுகையைப் பற்றி பேசுகிறார், சலுகை என்ற பழஞ்சரக்கை இந்நாட்டு இந்தியர்கள் மூட்டை கட்டி வீசிவிட்டு, உரிமைக்கும், சமத்துவத்திற்கும் வெகுநாட்களாக குரல் கொடுத்து வருகிறார்கள் என்பதைக்கூடவா அவர் உணராமல் இருக்கிறார்?
பக்காத்தான் மத்திய ஆட்சியைக் கைப்பற்றினால் 100 நாட்களில் சுடச்சுட அடையாள அட்டையா என்று நக்கல் பாணியில் முன்பு கேள்வி எழுப்பியுள்ள ம.இ.காவின் தேசிய உதவித் தலைவரும் துணையமைச்சருமான அவர் எதனையும் சீர்தூக்கிப் பார்க்காமல் அறிக்கை விடுவதில் ஒரு முன்னாள் அமைச்சரை மிஞ்சி விட்டார் என்பதை சேவியர் சுட்டிக் காட்டினார்.
பக்காத்தான் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முதல் வாக்குறுதி, நாட்டில் இனப் பாகுபாட்டினை ஒழித்து ஒற்றுமை நல்லிணக்கத்தை நீடிப்பதாகும், பிறகு எப்படி எல்லாவற்றுக்கும் இன அடிப்படையில் கொள்கை வகுப்பது?
இனப் பாகுபாடு தொடர வேண்டுமா?
பக்காத்தானின் புக்கு ஜிங்காவிலும், இந்தத் தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ள அடிப்படைத் தத்துவம், ஏழ்மையைப் போக்க இனம், மதம், மொழி வேற்றுமையை பார்க்காதே என்பதேயாகும். அந்த அடிப்படையில் கொள்கைகள் வரையப் பட்டுள்ளது. நீங்களும் உங்கள் பாரிசானும் இதுவரை இந்த நாட்டில் கட்டி வளர்த்த இனப் பாகுபாடு கொள்கையால் இந்திய சமுதாயம் இழந்தது ஏராளம் என்று அவர் இடித்துரைத்தார்.
தோட்டப்புறத்தில் பாலுக்கும், இறைச்சிக்கும் மாடு வளர்த்து, அதனை விற்றுச் சிறிய கூடுதல் வருமானம் பெற்ற இந்தியரை தோட்டத்திலிருந்து வெளியேற்றப் பாரிசான் ஆட்சியில், அம்னோவிற்கு சொந்தமான பி.என்.பி தோட்டங்களில் எத்தனைக் கெடுபிடிகள்? ஆனால் அதே மாட்டை வளர்க்கத்தானே முன்னாள் அமைச்சரின் கணவருக்கு அரசாங்கப் பணம் வெள்ளி 25 கோடிகள் வழங்கப்பட்டது அதிலுள்ள இன வாதக் கொடுமைகள் உங்களுக்குப் புரியவில்லையா?
“மலாய்க்கார குடும்ப ஏழ்மை மற்றும் கணவன்-மனைவி ஒற்றுமை சீர்குலைவினால் பிள்ளைகள் சீரழிவதைத் தடுக்க அரசாங்கச் செலவில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான தங்கும் விடுதி வசதிகொண்ட பள்ளிகள். ஆனால், அதே சீரழிவில் சிக்கிய இந்தியர்களின் பிள்ளைகளுக்கு நாடு முழுவதும் சிறைச்சாலைகள். இதனைச் சிந்திக்க மாட்டீர்களா?”
புதிய ஆட்சியில் புதிய பல்லினக் கொள்கை
இந்நாட்டின் உயர்வுக்கு உழைத்த இந்தியர்களுக்கு, சிகப்பு அடையாள அட்டை, டி.என்.ஏ சோதனை இல்லாவிட்டால் அதுவும் இல்லையாம்!. ஆனால் அந்நியனுக்கோ, பிரஜா உரிமையுடன் வாக்களிக்கவும் தகுதி! பூமி புத்ரா சிறப்பு சலுகை, மந்திரி புசாராக பதவியும் உண்டு. இனப் பாகுபாட்டால் 55 ஆண்டுகால ஆட்சியில் இதுதானே உங்கள் சாதனை. இன்னுமா இன பாகுபாடு வேண்டும்?
இன்று புதிய ஆட்சி. இது பல்லினக் கொள்கையுடையது. அதனை இப்பொழுது பரிசார்த்தமுறையில் சிலாங்கூரிலும் பக்காத்தான் ஆட்சிப்புரியும் மற்ற மாநிலங்களிலும் அமல் செய்து வெற்றியும் பெற்று விட்டது. இங்கு இந்தியர்களுக்கு மட்டுந்தான் தமிழ்ப்பள்ளி கட்டப் பட்டுள்ளது. இந்திய பிள்ளைகளுக்காக மட்டுந்தான் தங்கும் விடுதி கட்டப் படுகிறது. ஆனால் இதை இந்தியர்களுக்கு செய்யப் போகிறோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து ஏமாற்ற வில்லை. அதுதான் எங்கள் பாணி. தெரிந்திருக்காவிட்டால், இன்மேலாவது தெரிந்து கொள்ளுங்கள் என்று சேவியர் மேலும் கூறினார்.
வார்த்தைக்கு வார்த்தை இந்தியர் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டு 55 ஆண்டுகள் ஆட்சி செய்வதை விட, 55 ஆண்டு ஆட்சிக்குப்பின் இந்தியர்களை சுழியத்தில் வைத்திருப்பதை விட, எங்கள் பல்லின சித்தாந்தத்தினால் இச்சமுதாயத்தின் சிறந்த வாழ்வுக்கு வழி காட்ட உறுதி பூண்டுள்ளோம்.
இச்சமுதாயம் அதற்கு நிச்சயம் எங்களுக்குத் துணை நிற்கும் என்பதில் சந்தேகமில்லை என்று உறுதியாகக் கூறினார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.