1966ம் ஆண்டுக்கான சங்கச் சட்டத்தின் பிரிவு 14(1)க்கு ஏற்ப முழுமையான ஆண்டறிக்கையை சமர்பிக்க டிஏபி தவறி விட்டதாக ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி கூறிக் கொண்டுள்ளார்.
அதனால் அந்தக் கட்சியின் தேர்தல் குளறுபடி குறித்து தமது அலுவலகம் விரிவான ஆய்வை நடத்துவதற்கு இயலவில்லை என அதன் தலைமை இயக்குநர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் உத்துசான் மலேசியாவிடம் கூறினார்.
டிஏபி தேர்தல்களில் வாக்குகளை எண்ணும் போது ஏற்பட்ட தவறை பிப்ரவரி எட்டாம் தேதி அந்தக் கட்சி சமர்பித்த ஆவணங்கள் விளக்கவில்லை என அவர் சொன்னார்.
“டிஏபி ஆண்டறிகையையும் அதன் மத்திய நிர்வாகக் குழு தேர்தல் முடிவுகளையும் மட்டுமே சமர்பித்துள்ளது. ஆனால் நாங்கள் அந்தத் தேர்தல் முடிவுகள் குறித்தும் அது எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்தும் அந்தத் தவறு எப்படி நிகழ்ந்தது என்பது பற்றியும் எங்கு அந்தத் தேர்தல் நடைபெற்றது என்பதையும் நாங்கள் அறிய விரும்புகிறோம். அவை பற்றிய விவரங்கள் அங்கு இல்லை.”
“இதற்கு முன்னதாக சங்கச் சட்டத்தில் உள்ள நிபந்தனைகளுக்கு ஏற்ப எங்களுக்குத் தேவைப்படும் ஆவணங்கள் பட்டியலை நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்தோம். தகவல்கள் முழுமையாக இல்லாத வரையில் விசாரணையை விரிவாக மேற்கொள்ள முடியாது,” என அவர் சொன்னதாகவும் அந்த ஏடு குறிப்பிட்டது.
டிஏபி தனது ஆண்டறிக்கையை காலக்கெடுவுக்கு முன்னதாக சமர்பிக்கவில்லை எனத் தாம் தவறுதலாக குற்றம் சாட்டியதற்காக கடந்த மாதம் அப்துல் ரஹ்மான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.