மின்னல் படை வீரர்கள் மரணமடைந்ததற்கு யார் காரணம் ?

hisham“ஊடுருவல்காரர்களுடன் நடத்தப்பட்ட குளறுபடியான பேச்சுக்கள் மீது பொது விசாரணை நிகழ வேண்டும். அப்போது தான் பாடம் கற்க முடியும்”

லாஹாட் டத்து துப்பாக்கிச் சண்டையில் இரு மலேசியர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்

மலேசிய இனம்: இராணுவ வியூக அடிப்படையில் பார்த்தால் தொடக்கத்திலிருந்தே அது பெரும் பேரிடராகும்.  ஆயுதங்களை நிறைய வைத்திருந்த நன்கு அனுபவம் வாய்ந்த ‘பட்டாளம்’ ஒன்று நடத்திய இராணுவப் படையெடுப்பே அந்தச் சம்பவமாகும். அவர்கள் யாருக்கும் தெரியாமல் நமது கடல் எல்லைக்குள் ஊடுருவி நமது பிரதேசத்தை ஆக்கிரமித்திருந்தனர்.

அவர்கள் மீது உடனடியாக தாக்குதலை தொடங்காமல் மலேசிய அரசாங்கம் அந்த ஊடுருவல்காரர்கள் தங்களது பாதுகாப்பு அரண்களை வலுப்படுத்திக் கொள்ள மூன்று வாரங்களுக்கு மேல் அவகாசம் வழங்கியது.

நாம் உடனே உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் நமக்கு உயிருடற்சேதங்கள் ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம். நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்பட்டதால் நமது வீரர்கள் வலுப்படுத்தப்பட்ட எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அதனால் உயிருடற்சேதங்களும் அதிகமாக இருந்தன.

நமது வீரர்கள் உயிரிழந்ததற்கு கிரிமினல் ரீதியில் திறமையற்ற பிஎன் அரசாங்கமே-குறிப்பாக பிரதமர், தற்காப்பு அமைச்சர் உள்துறை அமைச்சர் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும்.

பீரங்கி: அவர்கள் தீவிரவாதிகளும் இல்லை பயங்கரவாதிகளும் இல்லை என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியிருக்கிறார்.

அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட அல்லது காயம்பட்ட வீரர்களுடைய குடும்பங்களிடம் அவர் அதனைச் சொல்ல வேண்டும். உள்துறை அமைச்சில் ‘சிந்திக்கத் தெரியாத’ ஒருவர் அமைச்சராக இருப்பதின் விளைவே அதுவாகும்.

பிரச்னையே இல்லாத ஒன்றை அவரிடம் கொடுங்கள். அவர் அதனை தேசிய நெருக்கடியாக பெரிதாக்கி விடுவார். உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதால் இனிமேலும் அது வேடிக்கை அல்ல.

ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் கூட முக்கியமல்ல. நஜிப்பும் அவரது நெருங்கிய உறவினர் ஹிஷாமுடின் ஹுசேனும் மட்டுமே லஹாட் டத்து விஷயத்தில் முக்கியமானவர்கள். அந்த இரண்டு திறமையின்மை காரணமாக நமது பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆயுதமேந்திய ஊடுருவலை இராணுவமே முறியடிக்க வேண்டும். போலீஸ் அல்ல. இராணுவ ஆயுதங்களை நிறைய வைத்துள்ள தீவிரவாதிகளை நாம் சமாளிக்க வேண்டியுள்ளது. சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்த பெர்சே போராளிகள் அல்ல.

நஜிப் நமது தேசியப் பாதுகாப்பில் அரசியல் விளையாடுகின்றார். ஒரு பிரச்னை மீது தாம் நீண்ட காலம் அமர்ந்திருந்தால் அது போய் விடும் என அவர் நம்பியிருந்தார்.

படைபலத்தை பயன்படுத்தினால் சபாவில் அம்னோ வலிமை குறைந்து விடும் என அவர் அஞ்சினார்.

ஆனால் அந்த நிலை மாறி அவர் இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

கொக்டோ எர்கோ சம்: நமது பிரதேசத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பு என்ற சிறிய அடிப்படை பிரச்னை மீது கூட உறுதியான நடவடிக்கையை உங்களால் எடுக்க முடியவில்லை என்னும் போது நீங்கள் எப்படி நாட்டின் மற்ற பகுதிகளை ஆட்சி செய்யப் போகிறீர்கள் ?

பெர்ட்தான்: லஹாட் டத்துவில் ஊடுருவியவர்கள் மீது நமது அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறியதால் நமது இரண்டு போலீஸ்காரர்கள் தேவை இல்லாமல் உயிரிழந்தனர்.

நாம் ஊடுருவல்காரர்கள் மீது வேறு விதமாக செயல்பட்டிருந்தால் நமது போலீஸ்காரர்களுடைய உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியுமா ? நாம்  ஊடுருவல்காரர்களுடன் உறுதியாகச் செயல்படவில்லையா ? பலர் அப்படித் தான் எண்ணுகின்றனர்.

தொடக்கத்திலிருந்தே நாம் அவர்களுடன் உறுதியாக நடந்து கொண்டு தேக்க நிலையை முடிவுக்குக் கொண்டு வர குறிப்பிட்ட இலக்கை வைத்திருந்தால் நமது தரப்பில் உயிருடற்சேதங்கள் ஏற்பட்டிருக்காது.

ஊடுருவல்காரர்கள் யாரையும் பிணையாக வைத்திருக்காததால் சூழ்நிலை மிகவும் சுலபமாக இருந்தது. பொது மக்களிடமிருந்தும் அவர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். அவர்களை எளிதாக பிடிக்கக் கூடிய சூழ்நிலை இருந்தது.

ஆனால் அந்த நடவடிக்கைக்குப் பொறுப்பேற்றிருந்த போலீஸ் அதிகாரிகள் உறுதியாகச் செயல்படவில்லை. ஊடுருவல்காரர்கள் அரண்களை அமைத்துள்ள அனுமதித்து விட்டனர்.

பலர் ஏற்கனவே சொல்லியிருப்பது போல அந்த ‘படையெடுப்பை’ சமாளிக்கும் பொறுப்பு சண்டையிடுவதற்குப் பயிற்சி பெற்ற இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். குற்றச் செயல்களை முறியடிக்கும் பணியில் சம்பந்தப்பட்டுள்ள போலீஸ் படையிடம் அல்ல.

ஊடுருவல்காரர்களுடன் நடத்தப்பட்ட குளறுபடியான பேச்சுக்கள் மீது பொது விசாரணை நிகழ வேண்டும். அப்போது தான் பாடம் கற்க முடியும்.

 

TAGS: