தற்போது ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றப்பேரவை கூட்டப்பட்டுள்ளது. அதில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிய வேண்டும் என்ற கோரிக்கை (இங்கே சொடுக்கவும்) நேற்று மலேசிய வெளியுறவு அமைச்சிடம் வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பில் மலேசிய வெளியுறவு அமைச்சரை பிரதிநிதித்து இலங்கை தொடர்புடைய மனித உரிமை பகுதியின் நிர்வாகச் செயலாளர் சித்தி அஜ்ஜார் அட்னின் தனது பணியாளர்களுடன் கலந்து கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த நிகழ்வில் சுவராம் மனித உரிமை கழகத்தலைவர் கா. ஆறுமுகம், தெலுக்இந்தான் நாடளுமன்ற உறுப்பினருமான மனோகரன் மாரிமுத்து, மலேசிய தமிழர் பேரவைத் தலைவர் மருத்துவர் ஐயங்கரன் மற்றும் ப. கந்தசாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
சுமார் இருபது இலட்சம் தமிழர்களைக் கொண்ட மலேசிய மக்களின் எதிர்ப்பார்ப்பாக இந்தக் கோரிக்கை இருக்கும் என்கிறார் இலங்கை மீதிலான மலேசிய நாடாளுமன்ற கூட்டமைப்பின் செயலாளரும் தெலுக்இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகரன் மாரிமுத்து.
கடந்த மாதம் 19-ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றத்தில் நடந்த வட்டமேசை பேராளர் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை மலேசிய நாடாளுமன்ற கூட்டமைப்பு நிறைவேற்றியது. அதில் ஒன்றுதான் ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை மலேசியா முன்மொழிய வேண்டும் அல்லது மற்ற நாடுகளால் கொண்டு வரப்படும் அது போன்ற தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதாகும்.
சிறீலங்கா சிங்கள அரசாங்கம் அந்நாட்டு குடிமக்களாகிய தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு மட்டுமல்லாமல் எஞ்சியிருக்கும் தமிழர்களையும் தொடர்ந்து துன்புறுத்தி அவர்களையும் அவர்கள் வாழ்ந்த தடயங்களையும் முற்றாகத் துடைத்தொழிக்கும் நடவடிக்கையை அமல்படுத்தி வருகிறது. உலக நாடுகளின் கண்டனங்களைச் சற்றும் பொருட்படுத்தாது தமிழ் இன அழிப்பில் அது தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று விளக்கமளித்தார் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம்.
மேலும், இலங்கை அரசின் இந்த தமிழ் இனப்படுகொலை; மொழி, இனம்,பண்பாடு மற்றும் சமயம் ஆகியவற்றில் ஒன்றுபட்ட மலேசியத் தமிழர்களை வெகுவாகப் பாதித்துள்ளது. இலங்கை அரசின் தமிழ் இனப்படுகொலையையும், தமிழர்களுக்கு எதிராக அந்த அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வரும் கொள்கைகளையும் மலேசியத் தமிழர்கள் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றனர் என்றார் ஆறுமுகம்.
இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் மட்டுமல்லாமல் தற்போது அங்கு வாழும் முஸ்லிம் மக்களும் சிங்களவாதிகளின் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள விபரத்தை மருத்துவர் ஐயங்கரன் சுருக்கமாக பட்டியலிட்டார்.
சமர்பிக்கப்பட்ட கோரிக்கைகள் உடனடியாக வெளியுறவு அமைச்சர் அல்லது அமைச்சின் தலைமைச்செயலாளர் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என்று சித்தி அஜ்ஜார் தெரிவித்தார்.