டிஏபி எம்.மனோகரனுக்கு விதித்த ஆறுமாத இடைநீக்க நடவடிக்கையைத் தள்ளுபடி செய்தது ஒரு தந்திரம் என்று முன்னாள் பிகேஆர் உறுப்பினர் சுல்கிப்ளி நோர்டின் வருணித்துள்ளார். தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்க்க அவ்வாறு செய்யப்பட்டதாம்.
“இந்நடவடிக்கை டிஏபி உண்மைகளைத் திரித்துக்கூறும் அரசியலைப் பின்பற்றுவதையும் மற்ற இனத் தலைவர்கள் விசயத்தில் இரட்டை நியாயங்களைக் கடைப்பிடிப்பதையும் காண்பிக்கிறது”, என்று சுல்கிப்ளியை (இப்போது கூலிம் பண்டார் பாரு சுயேச்சை எம்பி) மேற்கோள்காட்டி உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தி அறிக்கை, பிகேஆரின் இன்னொரு முன்னாள் உறுப்பினர் பாடாங் செராய் எம்பி என், கோபாலகிருஷ்ணனையும் மேற்கோள் காட்டியிருந்தது. அவர் லிம்முக்கு நடவடிக்கையினின்றும் விலக்களிக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
“மனோகரன் மீதான முடிவில் நேர்மை இல்லை.அவரது இடைநீக்கம் பற்றி நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதை அடுத்து அவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது.லிம்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?”, என்று கோபாலகிருஷ்ணன் வினவினார்.
கோத்தா ஆலம் ஷா சட்டமன்ற உறுப்பினரான மனோகரன்( வலம்), பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்கு வந்தால் தேசியக் கொடி மாற்றப்படும் என்று ஃபேஸ்புக்கில் இடுகை இட்டது பெரும் எதிர்ப்பைக் கிளப்பி விட்டது.அதன் விளைவாக டிஏபி அவரை ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்தது.
ஆனால், நேற்று அக்கட்சி,மனோகரனுக்கு எதிரான நடவடிக்கையைத் தள்ளுபடி செய்தது. பேஸ் புக்கில் தம் இடுகையை மீட்டுக் கொண்டதுடன் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருப்பதைக் கருத்தில்கொண்டு மனோரனைக் ‘கடும் எச்சரிக்கை’யுடன் விடுவிப்பதாக அது அறிவித்தது.
லிம், சிங்கப்பூரில் வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் பேசீக்கொண்டிருந்தபோது ஜோகூருக்குச் செல்வோர் கடத்திச் செல்லப்படும் அபாயம் இருப்பதாகவும் தாம் முதலமைச்சராகவுள்ள பினாங்கில் அந்த அபாயம் இல்லை என்றும் சொன்னதாகக் கூறப்படுகிறது. இது ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.
ஆனாலும், லிம்முக்கு எதிராக நடவடிக்கை எட்டுக்கப்படாது என்று டிஏபி தலைவர் கர்பால் சிங், கட்சியின் மத்திய செயல்குழுவில் கூறினார்.