இன்று காலை 11.00 மணியளவில் கோலாலம்பூரின் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் கருப்பு உடை கண்டன ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. செம்பருத்தி இணையத்தளம் எற்பாடு செய்திருந்த இந்த கண்டன ஊர்வலத்தில் சுமார் 800-க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் ஜொகூர், பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், கேமரன் மலை, சிலாங்கூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த பரவலான மக்கள் தங்களை முழுமையாக நிகழ்வில் ஈடுபடுத்திக் கொண்டனர். இதன் ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் ஆறுமுகம் நிகழ்வின் நோக்கம் ஈடேற செயலாற்றிய அனைவரையும் நன்றி கூர்ந்து நிகழ்வின் நோக்கத்தை விவரித்தார்.
2009-ஆம் ஆண்டு முடிவுற்ற இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்; ஆறு இலட்சம் தமிழர்கள் இடம் பெயர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர்; தொன்னூறு ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்; பலர் உறுப்புகள் இழந்து அல்லது உடல் உறுப்புகள் சிதைந்து அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளனர்; வாழ்வாதாரங்கள் மறுக்கப்பட்டு தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்த சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்கின்ற அவல நிலைக்குத் தமிழ்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அரசியல் தீர்வற்ற நிலையில் ஜெனோசைட் என்று வர்ணிக்கப்படும் இன அழிப்பும் இன ஒழிப்பும் தமிழர்களுக்கு ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது என்கிறார் வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.
மேலும், ஐநா நிபுணத்துவ அறிக்கை, சார்ல்ஸ் பெட்ரே அறிக்கை, டப்ளின் அறிக்கை, சேனல் 4 வெளியிட்டுள்ள காணொளிகள் என தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதநேயமற்ற குற்றவியல் நடவடிக்கைகள் குறித்த சான்றுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதற்கு வேலியே பயிரை மேய்ந்தது போல ஐக்கிய நாட்டுச் சபையின் அதிகாரிகளும் துணை போனது, தமிழர்களை அழிக்க உலகமே திரண்டது போன்ற உணர்வை தருகிறது என்றார் ஆறுமுகம்.
தற்போது ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றப்பேரவை கூட்டப்பட்டுள்ளது. அதில் உறுப்பியம் பெற்றுள்ள 44 நாடுகளில் ஆசிய வட்டாரத்தில் செல்வாக்குமிக்க வாக்களிக்கும் உரிமைகொண்ட நாடாக மலேசியா திகழ்கிறது. இலங்கைப் போரினால் சொல்லொண்ணாத் துன்பங்களுக்கு உள்ளாகி இருக்கும் தமிழர்களுக்கு, மலேசியத் தமிழர்களாகிய நாம் மலேசிய அரசின் ஊடாக அனைத்துலக சமூகத்திற்கு நெருக்குதல் அளிக்கும் பணியைச் செய்வதுதான் சிறந்த வழிமுறைகளுள் ஒன்றாக இருக்க முடியும் என அவர் வலியுறுத்தினார்.
மலேசியா பல்லின மக்கள் வாழும் நாடு. முக்கியமாக சிறுபான்மை இனங்கள் ஒரு பெரும்பான்மை இனத்தின் கீழ் வாழ வேண்டிய சூழலில் இருக்கின்றோம். எனவே, இனங்களுக்கிடையிலான மொழிப் பண்பாட்டு வாழ்வாதார விடயங்களில் முரண்பாடுகள் நிகழ்வது தவிர்க்க இயலாதது. அவற்றைக் களைவதற்கான தீர்வு வழிமுறை என்பது அனைத்து இனங்களுக்குமான மனித உரிமைக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும்.
மேலும், அனைத்துலக அளவில் மலேசியா பல்லினங்கள் வாழும் ஓர் எடுத்துக்காட்டுக்குறிய நாடாக திகழ்கிறது. அது மனித உரிமை கடப்பாடுகளுக்கு உட்பட்டுதான் தனது கொள்கைகளையும் சட்டங்களையும் வகுக்க வேண்டும்.
ஆனால் இலங்கை , சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை இராணுவத் தீர்வை முன்வைத்து தனது கொடிய கரங்களைக் கொண்டு நசுக்கி தமிழர்களைக் கொன்று குவித்ததன் வாயிலாக முடிவுக்குக் கொண்டு வந்தது. இப்படியாக இனப்படுகொலையின் வழி ஓரினத்தை அழித்துவிட்டு முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதென்பது கடும் கண்டனத்திற்குறியது என்று சாடினார் ஆறுமுகம்.
இதுபோன்ற நடவடிக்கைகளை மனிதநேயமிக்க எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளாது. ஏற்றுக் கொள்ளவும் கூடாது. நமது நாட்டிற்கு அருகாமையில் உள்ள இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்குப் பலியாக்கப்பட்டு இருக்கும் நிலையில், மலேசியத் தமிழர்கள் அவர்களின் அரசியல்பூர்வமான தீர்வை நாடுவதும் தேடுவதும் காலத்தின் கடப்பாடு ஆகும் என சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவருமாகிய வழக்கறிஞர் கா. ஆறுமுகம் குறிப்பிட்டார்.
இன்றைய நிகழ்வின் வழி ஒருங்கிணைக்கப்பட்ட மலேசியத் தமிழர்களின் சார்பில் நாம் மலேசிய அரசைக் கேட்டுக் கொள்வதற்கு அவர் முன்வைத்த இரண்டு தீர்மானங்களும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முதலாவது தீர்மானம், தற்பொழுது ஜெனிவாவில் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிய வேண்டும். அதில் சுயேட்சையான அனைத்துலக விசாரணைக் குழுவொன்றை அமைத்து அதன் வழி இலங்கையில் நடைப்பெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றம், மனிதநேயத்திற்கு எதிராக நடத்தப்பெற்ற குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என்பதாகும்.
இரண்டாவது தீர்மானம், இவ்வாண்டு இறுதியின் கொழும்பில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகள் (காமன்வெல்த்) மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும். ஓரினத்தை அழிப்பதன் வழி இறையாண்மை பெற்றுவிட்டதாக கூறும் இலங்கை அரசை பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றுவதற்கான தீர்மானத்தை பொதுநலவாய செயலகத்திடம் மலேசியா முன்மொழிய வேண்டும் என்பதாகும்.